முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்ட அறிக்கை: கடந்த 2021 சட்டப்பேரவை தேர்தலின்போது திமுக வெளியிட்ட தேர்தல் அறிக்கை எண் 236-ல் “தமிழகத்தின் பல துறைகளின் கட்டுப்பாட்டில் உள்ள நியாயவிலைக் கடைகள் அனைத்தும் ஒரே துறையின்கீழ் கொண்டு வரப்படும்” என்ற வாக்குறுதி அளிக்கப்பட்டு இருந்தது.
இதேபோன்று வாக்குறுதி எண் 238-ல் “சுகாதாரத்தையும், எடையையும் உறுதிப்படுத்தும் வகையில் நியாய விலைக் கடைகளில் வழங்கப்படும் எல்லாப் பொருட்களும் பாக்கெட்களில் வழங்க ஆவன செய்யப்படும்” என்று குறிப்பிட்டிருந்தது.
திமுக ஆட்சிப் பொறுப்பேற்று 55 மாதங்கள் கடந்த நிலையில், இந்த வாக்குறுதிகளை நிறைவேற்ற எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்நிலையில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நியாய விலைக் கடை ஊழியர்கள் அண்மையில் சென்னையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த கோரிக்கைகளை நிறைவேற்றுவதன் மூலம் அரசுக்கு பெரிய அளவில் நிதிச் சுமை ஏற்படாது. சுகாதாரத்தையும், எடையையும் உறுதி செய்ய வழிவகுக்கும்.
எனவே, இதில் உடனடியாக முதல்வர் ஸ்டாலின் தலையிட்டு, நியாய விலைக் கடைகள் தொடர்பாக அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவும், ஊழியர்களின் ஊதிய உயர்வை உடனடியாக வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.







