தற்கொலைகள் தொடர்ந்து நடப்பதால் ஆன்லைன் சூதாட்டத்துக்கு தடை பெற வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்

0
30

பணத்தை இழந்தவர்கள் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்கள் தொடருவதால், ஆன்லைன் சூதாட்டத்துக்கு உச்ச நீதிமன்றத்தில் தடை பெறுவதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைதள பதிவில் கூறியிருப்பதாவது: தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் அருகே உள்ள சிலோன் காலனியை சேர்ந்த அருண்குமார் என்ற இளைஞர், பல மாதங்களாகவே ஆன்லைன் ரம்மிக்கு அடிமையாகியுள்ளார். வேலைக்குகூட செல்லாமல் மற்றவர்களிடம் கடன் வாங்கி ஆன்லைனில் ரம்மி விளையாடுவதையே வாடிக்கையாக கொண்டிருந்திருக்கிறார். சில நாட்களுக்கு முன்பு ஒரேநாளில் ரூ.20 ஆயிரத்தை இழந்ததால் ஏற்பட்ட விரக்தி மற்றும் கடன் சுமையால் அருண்குமார் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

ஆன்லைன் சூதாட்டத்துக்கு அடிமையானவர்கள் அதிலிருந்து மீண்டு வரமுடியாது என்பதற்கு, இதுதான் கொடிய எடுத்துக்காட்டு. பாமக நடத்திய தொடர் போராட்டங்களின் காரணமாக ஆன்லைன் சூதாட்டம் இருமுறை தடை செய்யப்பட்டது. ஆனாலும், அந்த தடையை நீதிமன்றத்தில் நியாயப்படுத்த தமிழக அரசு தவறிவிட்டதன் காரணமாகவே ஆன்லைன் சூதாட்டம் லட்சக்கணக்கான குடும்பங்களை மீள முடியாத கடன் வலையில் சிக்க வைத்திருக்கிறது.

தமிழக அரசு இயற்றிய ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்டம் ரம்மி, போக்கர் போன்ற விளையாட்டுகளுக்கு பொருந்தாது என்று கடந்த நவம்பர் 10-ம் தேதி சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்த பிறகு, கடந்த ஓராண்டில் மொத்தம் 16 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். ஆன்லைன் சூதாட்ட தற்கொலைகளுக்கு முடிவு கட்டுவதற்கான ஒரேவழி சென்னை உயர் நீதிமன்ற தீர்ப்புக்கு உச்ச நீதிமன்றத்தில் தடை பெறுவதுதான். ஆனால், தீர்ப்பளிக்கப்பட்டு ஓராண்டுக்கு மேலாகியும் உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசால் தடை பெற முடியவில்லை.

ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்த 16 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ள நிலையில், இன்னும் எத்தனை உயிர்கள் பலியாவதை தமிழக அரசு வேடிக்கை பார்க்கப் போகிறது. இந்த விவகாரத்தில் அரசு இனியும் உறங்கிக் கொண்டிருக்காமல் உச்ச நீதிமன்றத்தில் உள்ள ஆன்லைன் சூதாட்ட தடை தொடர்பான வழக்கை விரைவாக விசாரணைக்கு கொண்டுவந்து தடை பெறுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here