“திமுக-வுடனான எங்களது உறவு தேர்தல் காலத்து உறவு அல்ல. இது கொள்கை ரீதியான கூட்டணி. திமுக தலைவர் ஸ்டாலினுடன் நேற்றும் இருந்தோம், இன்றும் இருக்கிறோம், நாளையும் இருப்போம். திமுக என்ன முடிவு எடுக்கிறதோ அதற்கு முஸ்லிம் லீக் கட்டுப்படும்” என்று சொன்ன இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியும் தவெக அமைச்சரவையில் அங்கம் வகிக்கத் தயாராகிவிட்டது.
“எக்காலத்திலும் சிறுபான்மையினருக்கு பாதுகாப்பு அரணாக இருப்போம்” என்பதை அழுத்திச் சொல்லியே இத்தனை ஆண்டு காலமாக அரசியல் செய்து வந்திருக்கிறது திமுக. இதனால், இயல்பாகவே பாஜக-வை பகையாளி ஆக்கிக் கொண்டது அந்தக் கட்சி. ‘மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி’ என்று பிரகடனம் செய்தே இந்தத் தேர்தலையும் எதிர்கொண்டது திமுக.
ஆனால், ஜோசப் விஜய்யின் வருகையால் கிறிஸ்தவர்களில் பெரும் பகுதியினர் திமுக-வை கைகழுவினார்கள். முஸ்லிம்களிலும் ஒரு பகுதியினர் விஜய்க்கு கைகொடுத்தார்கள். விளைவு, கூட்டணியின் தலைவர் ஸ்டாலினே தோற்றுப் போனார்.
“நடிகர் விஜய் தனது பெயரை ஜோசப் விஜய் எனச் சொல்லி வாக்குக் கேட்டதால் பாரம்பரியமாக திமுக-வுக்கு வாக்களித்து வந்த கிறிஸ்தவர்கள் கூட விஜய்க்கு வாக்களித்து விட்டார்கள்” என்று வெளிப்படையாகவே உண்மையை ஒப்புக்கொண்டார் விசிக தலைவர் திருமா.
திமுக-வுக்கும் இந்தக் கணக்குகள் எல்லாம் நன்றாகவே தெரியும் என்றாலும் அதையெல்லாம் வெளியில் சொல்லி விவாதிக்க முடியாத நிலை.
அதேசமயம், காங்கிரஸ் கட்சி தவெக-வுக்கு ஆதரவளிக்க முன்வந்த போதுகூட பெரிதாக கவலைப்படாத திமுக, விசிக, கம்யூனிஸ்ட் மற்றும் முஸ்லிம் லீக் கட்சிகள் வெளியில் இருந்து விஜய் அரசுக்கு ஆதரவு என்ற நிலைப்பாட்டை எடுத்த போது ரொம்பவே நொந்து போனது. இருந்தாலும் அவர்களை வாழ்த்தி வழியனுப்பியது திமுக.
ஆனால், அங்கே போனதும் விசிக-வும் முஸ்லிம் லீக்கும் அமைச்சரவையில் பங்கேற்கும் முடிவைப் பற்றி பேசியதும், இரு கட்சிகளும் அமைச்சரவையில் சேர சம்மதம் தெரிவித்ததும் திமுக தரப்பை ரொம்பவே யோசிக்கவைத்து விட்டது.
ஆட்சியில் பங்கெடுக்க சம்மதித்துவிட்டாலும் தாங்கள் திமுக கூட்டணியில் தொடர்வதாக இந்தக் கட்சிகள் விநோதம் பேசி வருகின்றன. அப்படியானால் நாளைக்கே, விஜய் அரசுக்கு எதிராக திமுக போராட்டம் நடத்தினால் அதில் இந்தக் கட்சிகள் பங்கேற்குமா அல்லது வெளியில் இருந்து ஆதரிக்கிறோம் என்று சொல்லுமா? மக்களவைத் தேர்தலில் இந்தக் கட்சிகள் யாருடன் கைகோக்கும் என்ற கேள்விகளுக்கு எல்லாம் பதில் சொல்ல ஆளில்லை.
இந்தச் சூழலில், கட்சியின் அமைப்பு முறையில் பெரிய அளவிலான மாற்றங்களைச் செய்வதற்கு உரிய ஆய்வுகளை மேற்கொண்டு வருவதாகச் சொல்கிறார் திமுக தலைவர் ஸ்டாலின்.
இதுகுறித்து நம்மிடம் பேசிய திமுக முன்னாள் அமைச்சர் ஒருவர், “கட்சியின் அமைப்பு முறையை அல்ல… கூட்டணி பாலிசியையே மாற்ற வேண்டிய கட்டாயத்தில் இப்போது திமுக இருக்கிறது. இதுவரை யாருக்காக இந்த இயக்கம் பாடுபட்டதோ அவர்கள் இம்முறை திமுக-வை கைவிட்டு விட்டார்கள்.
இனியும் அவர்களைப் பற்றி பேசிக் கொண்டிருப்பதில் புண்ணியமில்லை. இத்தனை நாளும் தேசிய அளவில் காங்கிரஸ் எங்களுக்கு தோள்கொடுக்கும் என நம்பிக் கொண்டிருந்தோம். ஆனால், அந்தக் கட்சி முதுகில் குத்திவிட்டது. இனியும் காங்கிரஸையோ இண்டியா கூட்டணியையோ நம்புவதைவிட பேசாமல் பாஜக-வுடன் கைகோப்பதில் தவறில்லை என்றே தெரிகிறது.
திமுக-வுக்கு காங்கிரஸ் செய்த துரோகத்தைவிட பாஜக பெரிதாக ஒன்றும் செய்யவில்லை. மாநிலக் கட்சிகளை தொடர்ச்சியாக உதாசீனப்படுத்தி வரும் காங்கிரஸ், கடைசியில் திமுக தலையிலும் ‘கை’ வைத்திருக்கிறது. இதன் மூலம் அந்தக் கட்சி தேசிய அளவில் தனது நம்பிக்கையை இழந்து வருகிறது. மத்தியில் காங்கிரஸ் கட்சியோ அதன் கூட்டணியோ ஆட்சி அமைப்பதற்கான முகாந்திரம் எதுவும் கண்ணுக்கெட்டிய தூரம் வரைக்கும் தெரியவில்லை. அடுத்தும் பாஜக தான் என்ற நிலையே இப்போதும் இருக்கிறது.
இந்த நிலையில், இனியும் ‘பாஜக எதிர்ப்பு’ கோஷம் வேண்டுமா என்று திமுக தலைவர் யோசிக்க வேண்டும். நமது ஆதரவில் பழனிசாமியை முதல்வராக்கவும் தயார் என்ற நிலைப்பாட்டை தேர்தலுக்குப் பின் எடுத்தபோது, பாஜக கூட்டணி பற்றி சிந்திப்பதில் தவறேதும் இல்லையே.
பாஜக-வுடன் கைகோப்பதால் தமிழகத்தில் நாம் எதையும் இழக்கப் போவதில்லை. இப்போது விஜய்யை ஆதரிக்கும் கட்சிகள், ‘திமுக வரலாற்றுப் பிழையைச் செய்துவிட்டது’ என்று குதிக்கலாம். ‘நீங்கள் செய்ததை விடவா’ என ஒரே வரியில் அவர்களின் வாயை அடைக்க முடியும்.
தேர்தலுக்கு முன்பு திமுக அமைச்சர்கள் மீதான வழக்குகளின் விசாரணையை துரிதப்படுத்த பழனிசாமி அழுத்தம் கொடுத்தபோது கூட பாஜக அதைச் செய்யவில்லை. திமுக-வை விஜய்யும் பழனிசாமியும் தாக்கியதை விட பாஜக தாக்கியது கொஞ்சம் தான். இன்றைக்கு, நம்மால் ஜெயித்தவர்கள் விஜய்யை ஆதரிக்கப் போய்விட்டார்கள்.
ஆகவே, தோல்விக்கான காரணங்களை ஆராயத் தொடங்கி இருக்கும் தலைவர், அடுத்த வெற்றிக்கான ஆக்கபூர்வமான ஆலோசனைகளிலும் கவனம் செலுத்த வேண்டும். மத்தியிலும் மீண்டும் திமுக ஆளும் நிலையை உருவாக்க வேண்டும்” என்று மனதில் இருந்ததைக் கொட்டித் தீர்த்தார். விமர்சனங்களைப் பற்றி கவலைப்படாமல் இதற்கும் தயாராகுமா திமுக தலைமை?
