கனமழை காரணமாக டெல்டா மாவட்டங்களில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியது.
வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்த நிலையில், நாகை, மயிலாடுதுறை, திருவாரூர், காரைக்கால் மாவட்டங்களில் நேற்று நாள் முழுவதும் விட்டுவிட்டு கனமழை பெய்தது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. முக்கிய சாலைகள் வாகன நடமாட்டமின்றி வெறிச்சோடிக் காணப்பட்டன.
நாகையில் பல்வேறு இடங்களில் குடியிருப்பு பகுதிகளை மழைநீர் சூழ்ந்துள்ளது. திருவாரூர் மாவட்டம் நன்னிலம் பகுதியில் இளம் நெற்பயிர்களில் மீண்டும் மழைநீர் சூழ்ந்தது. இதனால், வயல்களில் தேங்கும் மழைநீரை வடியவைக்கும் பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். நாகை, வேளாங்கண்ணி, வேதாரண்யம், தரங்கம்பாடி, பூம்புகார் உள்ளிட்ட பகுதிகளில் கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது. மீன்வளத் துறை எச்சரிக்கையை அடுத்து, மீனவர்கள் 5-வது நாளாக நேற்றும் கடலுக்குள் மீன்பிடிக்கச் செல்லவில்லை.
தஞ்சாவூர் மாவட்டத்தில் நாள் முழுவதும் பெய்த மழை, சம்பா, தாளடி பயிர்களுக்கு மிகுந்த பயனாக இருக்கும் விவசாயிகள் தெரிவித்தனர். தொடர் மழை காரணமாக கல்லணைக் கால்வாயில் தண்ணீர் திறந்துவிடுவது நிறுத்தப்பட்டு உள்ளது.