அமைதிக்காகப் போராடி வரும் வெனிசுலா எதிர்க்கட்சித் தலைவர் மரியாவுக்கு நோபல் பரிசு: யார் இவர்?

0
17

 வெனிசுலா எதிர்க்​கட்​சித் தலை​வர் மரியா கொரினா மச்​சா​டாவுக்கு அமை​திக்​கான நோபல் பரிசு அறிவிக்​கப்​பட்டு உள்​ளது.

மருத்​து​வம், இயற்​பியல், வேதி​யியல், இலக்​கி​யம், அமை​தி, பொருளா​தா​ரம் ஆகிய துறை​களில் சாதனை படைத்​தவர்​களுக்கு நோபல் பரிசு வழங்​கப்​படு​கிறது. இதில் அமை​திக்​கான நோபல் பரிசுக்கு உரிய​வரை நார்வே நோபல் கமிட்டி தேர்வு செய்​கிறது. இதர 5 பிரிவு​களின் நோபல் பரிசுக்கு உரிய​வர்​களை ராயல் சுவிடிஷ் அகாடமி ஆப் சயின்​சஸ் தேர்வு செய்​கிறது.

இந்த ஆண்​டுக்​கான நோபல் பரிசு கடந்த 6-ம் தேதி முதல் அறிவிக்​கப்​பட்டு வரு​கிறது. மருத்​து​வம், இயற்​பியல், வேதி​யியல், இலக்​கி​யம் ஆகிய​வற்​றுக்​கான நோபல் பரிசுகள் அடுத்​தடுத்து அறிவிக்​கப்​பட்​டன. இந்த வரிசை​யில் அமை​திக்​கான நோபல் பரிசு நேற்று வெளி​யிடப்​பட்​டது. இதன்​படி வெனிசுலா நாட்​டின் எதிர்க்​கட்​சித் தலை​வர் மரியா கொரினா மச்​சா​டாவுக்கு அமை​திக்​கான நோபல் பரிசு அறிவிக்​கப்​பட்டு உள்​ளது.

இதுகுறித்து நார்வே நோபல் கமிட்டி வெளி​யிட்ட அறிக்​கை​யில் கூறி​யிருப்​ப​தாவது: வெனிசுலா மக்​களின் ஜனநாயக உரிமை​களுக்​காக மரியா அமைதி வழி​யில் போராடி வரு​கிறார். லத்​தீன் அமெரிக்க நாடு​களில் மிகச் சிறந்த ஜனநாயக தலை​வ​ராக அவர் விளங்​கு​கிறார். வெனிசுலா​வில் செயல்​பட்ட பல்​வேறு எதிர்க்​கட்​சிகளை ஒருங்​கிணைத்து சர்​வா​தி​காரத்​துக்கு எதி​ராக அவர் போராடு​கிறார்.

சர்​வா​தி​கார ஆட்சி காரண​மாக வெனிசுலா​வில் இருந்து சுமார் 80 லட்​சம் மக்​கள் வெளி​யேறி உள்​ளனர். இந்த சூழலில் மக்​களுக்​காக அவர் குரல் எழுப்பி வரு​கிறார். நேர்​மை​யான முறை​யில் தேர்​தல் நடத்​தப்பட வேண்​டும். ஜனநாயக ஆட்சி அமைய வேண்​டும். வறுமையை போக்க வேண்​டும் என்ற அவரது கருத்​துகள் வெனிசுலா மக்​களிடம் பெரும் ஆதரவை பெற்​றிருக்​கிறது.

மரி​யா​வின் உயிருக்கு அச்​சுறுத்​தல் இருக்​கிறது. எனினும் சர்​வா​தி​காரத்​துக்கு எதி​ராக அவர் துணிச்​சலாக போராடி வரு​கிறார். அவரை கவுரவிக்​கும் வகை​யில் அமை​திக்​கான நோபல் பரிசு அறிவிக்​கப்​பட்​டிருக்​கிறது.இவ்​வாறு நார்வே நோபல் கமிட்​டி​யின் அறிக்​கை​யில் தெரிவிக்​கப்​பட்டு உள்​ளது.

யார் இந்த மரி​யா? – கடந்த 1967-ம் ஆண்டு அக்​டோபர் 7-ம் தேதி வெனிசுலா​வின் கரகஸ் நகரில் மரியா கொரினா மச்​சாடா பிறந்​தார். பொறி​யாள​ரான இவர் கடந்த 2001-ம் ஆண்​டில் சுமேட் என்ற தொண்டு அமைப்பை தொடங்​கி​னார்.

இதன்​பிறகு அவர் அரசி​யலில் கால் பதித்​தார். கடந்த 2010-ம் ஆண்​டில் வெனிசுலா எம்​.பி.​யாக தேர்வு செய்​யப்​பட்​டார். நாடாளு​மன்​றத்​தில் சர்​வா​தி​காரம், ஊழலுக்கு எதி​ராக துணிச்​சலாக குரல் எழுப்​பி​னார். இதன்​காரண​மாக கடந்த 2014-ம் ஆண்​டில் அவரது எம்பி பதவி ரத்து செய்​யப்​பட்​டது.

கடந்த 2024-ம் ஆண்​டில் நடை​பெற்ற வெனிசுலா அதிபர் தேர்​தலில் ஜனநாயக ஒற்​றுமை வட்​டமேஜை என்ற எதிர்க்​கட்​சிகள் கூட்​டமைப்பு சார்​பில் மரியா போட்​டி​யிட்​டார். ஆனால் அதிபர் தேர்​தலில் போட்​டி​யிட அவருக்கு தடை விதிக்​கப்​பட்​டது.

கடந்த 2013-ம் ஆண்டு முதல் வெனிசுலா​வின் அதிப​ராக நிக்​கோலஸ் மதுரோ பதவி வகித்து வரு​கிறார். அவரது ஆட்​சிக்கு எதி​ராக மரியா தொடர் போராட்​டங்​களை நடத்தி வரு​கிறார். அந்த நாட்​டின் இரும்பு பெண்​மணி​யாக அவர் போற்​றப்​படு​கிறார். கணவரிடம் இருந்து விவாகரத்து பெற்ற மரி​யா​வுக்கு 3 பிள்​ளை​கள் உள்​ளனர். அவர்​களின் உயிருக்கு அச்​சுறுத்​தல் இருப்​ப​தால் 3 பேரும் வெளி​நாடு​களில் உள்​ளனர்.

இன்ப அதிர்ச்சி: மரியா கூறும்போது, “கடந்த 20 ஆண்​டு​களாக வெனிசுலா மக்​களின் உரிைகளுக்​காக போராடி வரு​கிறேன். எனக்கு அமை​திக்​கான நோபல் பரிசு அறிவிக்​கப்பட்​டிருப்​பது இன்ப அதிர்ச்​சியாக உள்​ளது. இந்த விருதை வெனிசுலா மக்​களுக்கு சமர்ப்​பிக்​கிறேன். வெனிசுலா​வில் சர்​வா​தி​கார ஆட்சி நடை​பெறுகிறது. இந்த ஆட்சியை எதிர்த்து பொது​மக்​கள் போராடி வரு​கின்​றனர். எங்​கள் நாட்​டில் மக்​கள் ஆட்சி அமைய வேண்​டும்” என்றார்.

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ஏமாற்றம்: இந்த ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசுக்கு 244 தனிநபர்கள், 94 அமைப்புகளின் பெயர்கள் பரிந்துரை செய்யப்பட்டன. எனினும் அதிபர் ட்ரம்ப் சமீபத்தில்தனக்கு அமைதிக்கான நோபல் பரிசுவழங்க வேண்டும் என்று வலியுறுத்தி வந்தார். இதுவரை 8 போர்களை நிறுத்திஉள்ளேன் என்று அவர் தொடர்ச்சியாக கூறி வருகிறார். ஆனால் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் முதல் ஜனவரி 31-ம் தேதிக்குள் பரிந்துரைகளை சமர்ப்பிக்க வேண்டும். கடந்த ஜனவரி20-ம் தேதி அமெரிக்க அதிபராக ட்ரம்ப் பதவியேற்றார். அவரது தரப்பில் அமைதிக்கான நோபல்பரிசுக்கு பரிந்துரை சமர்ப்பிக்கப்படவில்லை. அதன்படி இந்த ஆண்டு அதிபர் ட்ரம்பின் பெயர் பரிசீலனை செய்யப்படவில்லை. இதனால் அதிபர் ட்ரம்ப் மிகுந்த ஏமாற்றம் அடைந்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

அமெரிக்க அதிபர் மாளிகை செய்தித்தொடர்பாளர் ஸ்டீபன் சியுங் சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், “ அதிபர் ட்ரம்ப் உலக அமைதிக்காக பாடுபட்டுவருகிறார். பல்வேறு போர்களை நிறுத்திஉள்ளார். இதன்மூலம் ஏராளமான உயிர்களை அவர் காப்பாற்றி உள்ளார். அவர் மனிதாபிமானி. அவரைப் போன்று வேறு யாருமே கிடையாது. அமைதிக்கான நோபல் பரிசு அதிபர் ட்ரம்புக்கு வழங்கப்படாதது மிகுந்த வருத்தம் அளிக்கிறது. அமைதிக்கு பதிலாக அரசியலை நார்வே நோபல் கமிட்டி தேர்வு செய்திருக்கிறது” என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here