திரவிளை உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகள் மற்றும் மீனவர் கிராமங்களில் நேற்று முன்தினம் முதல் இன்று வரை தொடர்ந்து சூறாவளியுடன் மழை பெய்து வருகிறது. இதில் நேற்று இரவு பல இடங்களில் மரக்கிளைகள் முறிந்து மின்கம்பிகள் மேல் விழுந்ததால் மின்தடை ஏற்பட்டது. இதில் பல பகுதிகளில் சுமார் ஒரு மணி நேரத்தில் மின்தடை சரிசெய்யப்பட்டது.
அதைத் தொடர்ந்து நேற்று மீண்டும் நள்ளிரவில் பலத்த காற்றுடன் கனமழை பெய்தபோது ஆலங்கோடு – நம்பாளி சாலைப் பகுதியில் அயனிமரம் ஒன்று மின்கம்பி மற்றும் ஒரு வீட்டின் மேல்பகுதியில் சாய்ந்து விழுந்தது. உடனே இதுகுறித்த தகவலின்பேரில் நள்ளிரவில் மின்பணியாளர்கள் துரிதமாக செயல்பட்டு பழுதைச் சரிசெய்தனர். தென்மேற்குப் பருவமழை தொடங்கியதைத் தொடர்ந்து கடந்த 2 நாட்களாக பகல் மற்றும் இரவு நேரங்களில் விட்டுவிட்டு சூறாவளியுடன் கூடிய மழை பெய்து வருவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.














