பெண்களின் பாதுகாப்பே தமிழ்நாட்டின் பெருமை என்ற கருத்தை மையப்படுத்தி சென்னை தீவுத்திடலில் வரும் 17-ம் தேதி இரவு நேர மாரத்தான் போட்டி நடத்தப்பட உள்ளது.
தமிழ்நாடு தடகளச் சங்கத்துடன் இணைந்து ஸ்போர்ட்ஸ்புரோ இந்த போட்டிக்கு ஏற்பாடு செய்துள்ளது. தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் ஆதரவுடன் நடைபெறும் இந்த போட்டிக்கு மைண்ட் ஸ்பேஸ் பிசினஸ் பார்க்ஸ் ரெய்ட் ஸ்பான்சராக உள்ளது. இந்த போட்டி தொடர்பான அறிமுக விழா சென்னையில் நேற்று நடைபெற்றது.
இதில், விருகம்பாக்கம் எம்எல்ஏ சபரிநாதன், மைண்ட்ஸ்பேஸ் ரெய்ட் நிர்வாக இயக்குநர் ரமேஷ் நாயர், இந்திய தடகளச் சங்கத்தின் திட்டமிடல் குழுத் தலைவர் சி.லதா, சிம்ஸ் மருத்துவமனை துணைத் தலைவர் ராஜு சிவசாமி, ஸ்போர்ட்ஸ்புரோ இயக்குநர்கள் ஜெயராம், சபரி நாயர் மற்றும் ஆசிய விளையாட்டு போட்டியில் பதக்கங்கள் வென்ற வித்யா ராம்ராஜ், பரணிகா இளங்கோவன், அபிநயா ராஜராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்த இரவு நேர மாரத்தான் போட்டியில் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் 10 கிலோ மீட்டர் ஓட்டமும், 4 கிலோ மீட்டர் ஓட்டமும் நடைபெற உள்ளன. முதலிடம் பெறும் ஆடவர், மகளிருக்கு தலா ரூ.1 லட்சம் பரிசுத் தொகை வழங்கப்பட உள்ளது.சென்னையில் நடைபெற உள்ள இரவு நேர மாரத்தான் போட்டிக்கான சீருடை அறிமுகப்படுத்தப்பட்டது.
