காஞ்சிபுரம், பெரம்பலூர் உட்பட 6 மாவட்டங்களில் புதிய மருத்துவ கல்லூரிகள்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

0
31

தமிழகத்தில் காஞ்சிபுரம், பெரம்பலூர் உள்ளிட்ட 6 மாவட்டங்களில் மருத்துவக்கல்லூரிகள் தொடங்க மத்திய அரசிடம் அனுமதி கோரப்பட்டுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின்போது, ஆ.கிருஷ்ணசாமி (பூந்தமல்லி), பிரபாகரன் (பெரம்பலூர்), பேரவைத் துணைத்தலைவர் கு.பிச்சாண்டி (கீ்ழ் பெண்ணாத்தூர்), சிவகுமார் (மயிலம்) ஆகியோர் கேள்விகளுக்கு பதிலளித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசியதாவது:

தமிழ்நாட்டில் தற்போது 38 மாவட்டங்களில் 36 அரசு மருத்துவக்கல்லூரிகள் செயல்படுகின்றன. பூந்தமல்லியை உள்ளடக்கிய திருவள்ளூர் மாவட்டத்தில் ஒரு மருத்துவக்கல்லூரி இயங்குவதால், புதிய மருத்துவக்கல்லூரி அவசியமில்லை.

டெல்லியில் உள்ள ஆம் ஆத்மி மொஹல்லா கிளினிக்ஸ் போல், தமிழகத்தில் 708 நகர்ப்புற நல்வாழ்வு மையங்களை அமைக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். அந்த வகையில் ரூ.177 கோடி மதிப்பீட்டில் 708 மருத்துவமனைகள், 21 மாநகராட்சிகளிலும், 63 நகராட்சிகளிலும் அமையும் என அறிவிக்கப்பட்டு, அதில் 500 நகர்ப்புற நல வாழ்வு மையங்கள் கடந்த 2023 ஜூன் மாதம் தொடங்கி வைக்கப்பட்டது. மீதமுள்ள 208 நகர்ப்புற நலவாழ்வு மையங்கள் பணியாளர்கள் நியமனங்களுக்காக காத்திருக்கின்றன.

இந்த அரசு அமையும் முன்பு, மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைகளின் எண்ணிக்கை வெறும் 18 மட்டும்தான். ஆனால், தற்போது 19 புதிய மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைகள் தரம் உயர்த்தப்பட்டுள்ளன. இப்பணிகள் ரூ.1,018 கோடி செலவில் 5 இடங்களில் நடைபெறுகிறது. கடந்த மூன்றரை ஆண்டுகளில் மட்டும் அதிகமான மருத்துவமனைகள் புதிதாக வந்துள்ளன.

தமிழகத்தைப் பொருத்தவரை, பெரம்பலூர், மயிலாடுதுறை, தென்காசி, ராணிப்பேட்டை, திருப்பத்தூர், காஞ்சிபுரம் ஆகிய 6 மாவட்டங்களில் புதிய மருத்துவக் கல்லூரிகள் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை தொடர்ந்து மத்திய அரசிடம் வைக்கப்பட்டு வருகிறது. அக்கோரிக்கை நிறைவேறும்பட்சத்தில், பெரம்பலூரில் புதிய மருத்துவக் கல்லூரி நிச்சயமாக அமைக்கப்படும். இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here