தாமதமானாலும் சர்வதேச விண்வெளி மையத்தில் இருந்து சுனிதா வில்லியம்ஸை நாசா பூமிக்கு அழைத்து வரும்: இஸ்ரோ தலைவர் கருத்து

0
44

சர்வதேச விண்வெளி மையத்துக்கு விண்வெளி வீரர்களை அனுப்ப, கேப்சூல் வகை விண்கலம் தயாரிக்கும் பொறுப்பை போயிங்நிறுவனத்திடம் அமெரிக்க விண்வெளி நிறுவனம் நாசா வழங்கியது.

இதன் வடிவமைப்பாளர்களில் ஒருவர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சுனிதா வில்லியம்ஸ். இவர்சர்வதேச விண்வெளி மையத்துக்கு பல முறை சென்று திரும்பிய அனுபவம் மிக்கவர். போயிங் நிறுவனம் தயாரித்த ஸ்டார்லைனர் விண்கலம் பரிசோதனை முயற்சியாக, கடந்த மாதம் 5-ம் தேதி, அமெரிக்காவின் புளோரிடாவில் இருந்து அட்லஸ்-5 ராக்கெட் மூலம் விண்ணுக்கு அனுப்பப்பட்டது.

இதில் சுனிதா வில்லியம்ஸ், விண்வெளி வீரர் புட்ச் வில்மோர் ஆகியோர் சென்றனர். ஸ்டார்லைனர் விண்கலம் சர்வதேச விண்வெளி மையத்தை வெற்றிகரமாக சென்றடைந்து விட்டது. அதில் பயணம் செய்த இருவரும், சர்வதேச விண்வெளி மையத்தில்உள்ளனர். இந்த பயணத்துக்குப்பின் ஸ்டார்லைனர் விண்கலத்தை ஆய்வு செய்தபோது, ஹீலியம் எரிவாயு கசிவு ஏற்பட்டதும், அதனால் விண்கலத்தை இயக்கும்28 த்ரஸ்டர்களில் 5 செயல்படாததும் கண்டறிப்பட்டது.

இதை விண்வெளியிலேயே சரிசெய்யும் முயற்சியில் நாசா இன்ஜினியர்கள் ஈடுபட்டதால், ஸ்டார்லைனர் விண்கலம் கடந்தமாதம் 14-ம் தேதி பூமி திரும்பும்பயணம் இருமுறை ஒத்திப்போடப்பட்டது. அது பூமி திரும்பும் தேதிஇன்னும் உறுதி செய்யப்படவில்லை. இதுகுறித்து இஸ்ரோ தலைவர் டாக்டர் சோம்நாத் அளித்த பேட்டியில் கூறியதாவது:

பரிசோதனை முயற்சியாக முதல் முறை விண்ணுக்கு அனுப்பப்பட்ட ஸ்டார்லைனர் விண்கலத்தில் சுனிதா வில்லியம்ஸ் பயணம் செய்ததற்காக அவரது தைரியத்தை பாராட்ட வேண்டும். அதில் ஏற்பட்ட ஹீலியம் எரிவாயு கசிவால் த்ரஸ்டர்கள் இயங்காததை சரிசெய்யும் பணி நடைபெறுகிறது. அதனால் அவர் பூமி திரும்பவுதில் தாமதம் ஏற்படுகிறது. இது மிகவும் கவலையளிக்க கூடிய விஷயம் அல்ல.

சர்வதேச விண்வெளி மையம் மிகவும் பாதுகாப்பான இடம். அங்கு தற்போது மொத்தம் 9 விண்வெளி வீரர்கள் தங்கியுள்ளனர். அனைவரும் ஒருநாள் பூமி திரும்பியாக வேண்டும். தொழில்நுட்ப கோளாறை சரிசெய்யும் தாமதத்தால் அவர்கள் ஒர் இடத்தில் சிக்கி கொண்டதாக கருதக்கூடாது. அவர்களை பூமி அழைத்து வரும் திறன் நாசாவுக்கு உள்ளது.

இப்போதுள்ள பிரச்சினை புதிய ஸ்டார்லைனர் விண்கலத்தையும், அது விண்ணுக்கு சென்று மீண்டும் பூமி திரும்பும் திறனையும் பரிசோதிப்பதுதான். விண்வெளி வீரர்கள் நீண்ட நாட்கள் தங்குவ தற்கு சர்வதேச விண்வெளி மையம்பாதுகாப்பான இடம்.

இந்தியாவும் விண்கலத்தை உருவாக்கி கொண்டிருக்கிறது. சுனிதா வில்லியம்ஸ்க்கு நம்மைவிட அதிக அனுபவம் உள்ளது. அவர் வெற்றிகரமாக பூமி திரும்பவேண்டும். அவர் தனது பயண அனுபவங்களில் கற்றதை விண்கலம் உருவாக்குவதற்கு தெரிவிக்க வேண்டும். இந்திய விண்வெளி திட்டத்துக்கு, சுனிதா வில்லியம்ஸ் போல் யார் ஆலோசனை வழங்கினாலும் அதை இஸ்ரோ வரவேற்கும்.

இவ்வாறு டாக்டர் சோம்நாத் கூறினார்.