தமிழ்நாடு வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் தற்செயல் விடுப்பு எடுத்து போராட்டம் நேற்று நடந்தது. வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை, நில அளவைத்துறையில் பணிபுரிந்து வரும் அலுவலர்களுக்கு உயிர் மற்றும் உடைமைகளுக்கு பாதிப்பு ஏற்படாத வண்ணம் உரிய பணிப்பாதுகாப்பு வழங்க வேண்டும், வருவாய்த்துறை அலுவலர்கள் மீது தாக்குதல் நடைபெறும் பட்சத்தில் குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை கிடைக்க சிறப்பு சட்டம் நிறைவேற்ற வேண்டும், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறையில் உள்ள அனைத்து நிலையான காலி பணியிடங்களையும் நிரப்ப வேண்டும், பணியாளர்களுக்கு மேம்படுத்தப்பட்ட ஊதியம் மற்றும் தனி ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடந்தது.
இதையொட்டி அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் அரசு ஊழியர்கள் நாகர்கோவிலில் பேரணி மற்றும் தர்ணாவில் ஈடுபட்டனர். நாகராஜா கோவில் முன் இருந்து புறப்பட்ட இந்த பேரணியானது அண்ணா விளையாட்டு அரங்கம் முன் சென்று முடிவடைந்தது. பின்னர் அங்கு ஆர்ப்பாட்டம் நடந்தது.














