முருக பக்தர்கள் மாநாடு தமிழகத்தில் ஆன்மிக புரட்சியை ஏற்படுத்த உதவும்: காடேஸ்​வரா சுப்​பிரமணி​யம்

0
158

தமிழகத்தில் ஆன்மிகப் புரட்சி ஏற்பட முருக பக்தர்கள் மாநாடு உதவிகரமாக இருக்கும் என்று இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் கூறினார்.

மதுரையில் நேற்று நடைபெற்ற முருக பக்தர்கள் மாநாட்டில் அவர் பேசியதாவது: முருக பக்தர்கள் மாநாட்டை நடத்தவிடக் கூடாது என்று ஒரு கோஷ்டி கருதியது. அறநிலையத் துறை அமைச்சர் விரதம் இருக்கிறார் என்ற தகவலும் வந்தது.

இந்த மாநாடுக்கு விளம்பரம் செய்வது பற்றி யோசித்துபோது, விசிக தலைவர் தொல்.திருமாவளவன், வைகோ, அமைச்சர் சேகர்பாபு ஆகியோர் மாநாடு பற்றி பேசியே, அதிக விளம்பரம் தேடிக் கொடுத்தனர். இதற்காக அமைச்சர் சேகர்பாபுவுக்கு பாராட்டுத் தெரிவிக்கிறோம்.

இந்த மாநாடு எதற்கு, ஆந்திராவில் இருந்து துணை முதல்வர் எதற்காக வரவேண்டும் என்று அமைச்சர் சேகர்பாபு கேட்கிறார். அவர் ரூ.400 கோடியில் மாநாடு நடத்தப் போகிறோம் என்கிறார். இந்தப் பணம் எங்கிருந்து வந்தது என சொல்ல வேண்டும். கோயில் பணத்தில் இருந்து செலவிடப்படுகிறதா என கணக்குக் கொடுக்க வேண்டும்.

நாங்கள் மாநாட்டுக்குரிய செலவு, கணக்குகளைக் கொடுக்கத் தயாராக இருக்கிறோம். நீங்களும் வெளியிடத் தயாராக இருக்க வேண்டும். சென்னிமலையை மாற்றுவோம் என்று சொன்னார்கள். முருகனுக்கு கோபம் வந்தது. நீதிமன்றத்தில் நீதி வென்றது. திருப்பரங்குன்றம் மலை விவகாரத்தில் நீதிமன்ற உத்தரவின்படி ஒரு மணி நேரத்தில் அதிகமான கூட்டத்தை கூட்டினோம். அதுபோல, முருக பக்தர் மாநாட்டை தடை செய்ய மிரட்டல் விடுக்கப்பட்டது. கடைசியாக நீதிமன்றம் சென்று மாநாட்டை நடத்துகிறோம்.

ஏறத்தாழ 7 லட்சம் பேர் இங்கு வந்துள்ளனர். இது முருக பக்தர்கள் மாநாடு. அரசியல் மாநாடு அல்ல. தமிழகத்தில் ஆன்மிகப் புரட்சி ஏற்பட இம்மாநாடு உதவிகரமாக இருக்கும். மாநாட்டில் பங்கேற்க வருமாறு அனைத்துக் கட்சிகளுக்கும் அழைப்பு விடுத்தோம்.

எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி வாழ்த்துத் தெரிவித்துள்ளார். அவரது பிரதிநிதிகளாக முன்னாள் அமைச்சர்கள் வந்துள்ளனர். முதல்வரை நேரில் சந்தித்து, மாநாட்டு அழைப்பிதழ் வழங்க நேரம் கேட்டு கடிதம் எழுதியிருந்தோம், அதற்கு அவர் பதில் அளிக்கவில்லை. இவ்வாறு அவர் பேசினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here