ஆர்யா, கவுதம் ராம் கார்த்திக், சரத்குமார், மஞ்சு வாரியர், அனகா, ரைசா வில்சன், அதுல்யா என பலர் நடித்துள்ள படம், ‘மிஸ்டர் எக்ஸ்’. மனு ஆனந்த் இயக்கி இருக்கும் இப்படம் ஏப்.17-ல் வெளியாக இருக்கிறது.
பிரின்ஸ் பிக்சர்ஸ் எஸ்.லஷ்மன்குமார், மேவரிக் மூவிஸ் வினீத் ஜெயின் உடன் இணைந்து தயாரித்துள்ள படம் இது. இதன் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இயக்குநர் மனு ஆனந்த் கூறும்போது, “போலீஸ் அதிகாரிகள், ராணுவ அதிகாரிகள் யார் என்பது நம் எல்லோருக்கும் தெரியும். ஆனால் உளவாளிகளை யாருக்குமே தெரியாது.
இந்தப் படம் உருவாவதற்கு காரணம் 2 பேர். அவர்களைப் பற்றி எங்கேயும் சொன்னது இல்லை. இப்போது இங்கே கூட என்னால் சொல்ல முடியாது. அதுதான் உண்மை. இந்தியாவில் வெவ்வேறு காலகட்டத்தில் நடைபெற்ற ஏழு உண்மைச் சம்பவங்களை மையப்படுத்தி இந்தப் படம் உருவாகி உள்ளது.
ஆனால் சமீபத்திய பல பேட்டிகளில் இது துரந்தர் படத்தைப் போல இருக்கிறது என்று ஒரு பேச்சு உருவாகி உள்ளது. அதையும் இதையும் ஒப்பிட வேண்டாம். இது துரந்தர் அல்ல. இரண்டு படங்களிலுமே உண்மை சம்பவங்களை வைத்து படமாக்கி இருக்கிறோம் என்பதைத் தவிர வேறு எந்த ஒற்றுமையும் இல்லை” என்றார். படக்குழுவினர் கலந்துகொண்டனர்.














