ராஜஸ்தானில் பாகிஸ்தானை ஒட்டிய எல்லை மாவட்டங்களின் பாதுகாப்பு தொடர்பான மறு ஆய்வுக் கூட்டம் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் பிகானெரில் நேற்று முன்தினம் நடைபெற்றது.
இதில் ராஜஸ்தான் முதல்வர் பஜன்லால் சர்மா, மாநில அரசின் உயர் அதிகாரிகள், 5 எல்லை மாவட்டங்களின் ஆட்சியர்கள், காவல் கண்காணிப்பாளர்கள் பங்கேற்றனர். இது குறித்து மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: எல்லை மாவட்டங்களில் நடக்கும் குற்றங்கள் மற்றும் போதைப்பொருள் அச்சுறுத்தல்களுக்குப் பின்னால் உள்ள ஆதாரங்கள், அவற்றின் வடிவங்கள் மற்றும் வலைப்பின்னல்கள் குறித்து ஆய்வு நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும், எல்லை மாவட்டங்களில் உள்ள வங்கிகளின் பணப் பரிவர்த்தனைகளைக் கண்காணிக்கவும், போலி நிறுவனங்கள், போலி அடையாள அட்டைகளைக் கண்டறிந்து எல்லை தாண்டிய கடத்தலைக் கட்டுப்படுத்தவும் மாவட்ட ஆட்சியர்களுக்குக் கூடுதல் பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளன. சர்வதேச எல்லைகளில் இருந்து 15 கிலோ மீட்டர் தொலைவுக்குள் உள்ள சட்டவிரோத கட்டுமானங்களை இடிக்க வேண்டும் என்று உள்துறை அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
எல்லைப் பாதுகாப்பை பலப்படுத்தவும், ஊடுருவல் மற்றும் போதைப் பொருள் கடத்தலைத் தடுக்கவும் 360 டிகிரி முழுமையான பாதுகாப்பு வளையத்தை உருவாக்க வேண்டும் என்றும் அமைச்சர் அமித் ஷா வலியுறுத்தினார்.
ஊடுருவல், போதைப் பொருள் கடத்தல், ஆக்கிரமிப்பு, தீவிரவாதத்துக்கு நிதி திரட்டுதல் மற்றும் பிற எல்லை தாண்டிய குற்றங்கள் போன்ற பிரச்சினைகளை எதிர்கொள்வதற்கு எல்லைப் பாதுகாப்புப் படை, மத்திய நேரடி வரிகள் வாரியம், போதைப் பொருள் கட்டுப்பாட்டுப் பணியகம் மற்றும் மாநில அரசு ஆகியவை ஒருங்கிணைந்து செயல்பட வேண்டியதன் முக்கியத்துவத்தை அமைச்சர் வலியுறுத்தினார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
