அனைத்து மக்களுக்கும் பொதுவான சட்டங்களை கொண்டு வர பொது சிவில் சட்டத்தை மாநில பாஜக அரசுகள் நிறைவேற்றி வருகின்றன.
உத்தராகண்ட, குஜராத் மாநிலங்களை அடுத்து அசாம் சட்டப்பேரவையில் பொது சிவில் சட்ட மசோதா கடந்த திங்கள் கிழமை தாக்கல் செய்யப்பட்டது. இதில் ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட திருமணம் செய்தால் 7 ஆண்டு சிறை தண்டனை விதிக்கவும், திருமணம் செய்யாமல் ஒன்றாக சேர்ந்து வாழ்வதைபதிவு செய்யாவிட்டால் 3 ஆண்டு சிறை தண்டனை கிடைக்கவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
திருமணம், விவாகரத்து போன்றவற்றை கட்டாயம் பதிவு செய்யும் நடைமுறை இதில் கொண்டு வரப்பட்டுள்ளது. இவற்றை 60 நாட்களுக்குள் பதிவு செய்யாவிட்டால் ரூ.10,000 அபராதம் விதிக்கப்படும். சமூக வழக்கங்களை மீறி தடை செய்யப்பட்ட உறவுக்குள் திருமணம் செய்தால் 6 மாதம் வரை சிறை தண்டனையும், ரூ.50,000 அபராதமும் விதிக்கப்படும். ஆனால், பொது சிவில் சட்ட விதிமுறைகள் மாநில பழங்குடியினருக்கு பொருந்தாது. இந்த மசோதா பேரவையில் விவாதிக்கப்பட்டு நேற்று நிறைவற்றப்பட்டது.
இது குறித்து அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா கூறியதாவது: சொத்துரிமையில் அனைவருக்கும் நியாயமான மற்றும் சம பங்களிப்பு கிடைப்பதை உறுதி செய்யும் வகையில் பொது சிவில் சட்டம் நவீனப்படுத்தப்பட்டுள்ளது. வாரிசுரிமைக்கான சீரான விதிகள் இதில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் அசாம் மாநிலத்தில் உள்ளவர்களுக்கு சொத்துக்கள் நியாயமான முறையில் மாற்றப்படுவது உறுதி செய்யப்படும்.
உயில் எழுதாமல் இறப்பவர்களின் சொத்துரிமையானது வாரிசுகளுக்கு இடையே சீரான, பாலின சமத்துவ முன்னுரிமை வரிசையைப் பின்பற்றும். இதில் இறந்தவரின் மனைவி, கணவர், குழந்தைகள் மற்றும் பெற்றோர் அடங்குவர். உயில் வழி சொத்துரிமையைப் பொறுத்தவரை, நல்ல மனநிலையில் உள்ள எந்தவொரு முதியவரும் சாட்சிகளின் முன்னிலையில் உயிலை எழுதி வைத்து நிறைவேற்ற சட்டப்பூர்வமாக உரிமை பெற்றவராவார். இவ்வாறு அவர் கூறினார்.
