பூந்தமல்லி – போரூர் வரையில் 8 கி.மீ. தொலைவுக்கு ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரயிலின் சோதனை ஓட்டம் ஏப்.20-ம் தேதிக்கு பிறகு மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.
சென்னையில் நடைபெறும் மெட்ரோ ரயில் பணிகளில் கலங்கரை விளக்கம் – பூந்தமல்லி வரையிலான வழித்தடம் (26.1 கி.மீ.) ஒன்றாகும். பல்வேறு இடங்களில் இதற்கான பணிகள் தீவிரமாக நடைபெறுகின்றன. குறிப்பாக போரூர் – பூந்தமல்லி பைபாஸ் இடையே பல இடங்களில் கட்டுமானப் பணிகள் முழுவீச்சில் நடைபெறுகின்றன. இப்பாதையில் தற்போது உயர்மட்டப் பாதை அமைக்கப்பட்டுவிட்டது. அடுத்த கட்டமாக தண்டவாளம், மின்னணு பணிகள் வேகமாக நடைபெறும்.
இப்பாதையில், பூந்தமல்லி பணிமனையிலிருந்து முல்லை தோட்டம் வரையிலான 2.5 கி.மீ தொலைவுக்கு 25 கி.மீ. வேகத்தில் சோதனை ஓட்டம் முதன்முறையாக கடந்த 20-ம் தேதி வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது. இதையடுத்து, அடுத்த கட்ட சோதனை ஓட்டம் ஏப்ரலில் நடைபெற உள்ளது.
இதுகுறித்து, சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது: பூந்தமல்லி முதல் போரூர் வரையிலான மெட்ரோ ரயில் சேவை இந்த ஆண்டு டிசம்பரில் மக்கள் பயன்பாட்டுக்கு வரவுள்ளது. மேலும், ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட உள்ளன. கடந்த சில மாதங்களுக்கு முன்பு, பூந்தமல்லி பணிமனையில் ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரயில் சோதனைக்கு உட்படுத்தப்பட்டது. கடந்த 20-ம் தேதி பூந்தமல்லி பணிமனை – முல்லை தோட்டம் வரை சோதனை ஓட்டம் மேற்கொள்ளப்பட்டது.
தொடர்ந்து, பூந்தமல்லி முதல் போரூர் வரை மொத்தம் 8 கி.மீ. தொலைவுக்கு முழு மெட்ரோ ரயில் சோதனை ஓட்டத்தை வரும் ஏப்.20-ம் தேதிக்குப் பிறகு மேற்கொள்ள திட்டமிட்டுள்ளோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.














