நாகர்கோவிலில் இருந்து திருவனந்தபுரம் செல்லும் அரசு பஸ்கள் மார்த்தாண்டம் பஸ் நிலையத்திற்கு வந்து செல்லாமல் இருந்து வந்தது. இதனால் பயணிகள் அவதிப்பட்டனர். இந்த நிலையில் கடந்த தினம் குமரிக்கு வந்த போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் குழித்துறை நகராட்சி அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடத்தினார். அப்போது நகராட்சி சார்பில் மார்த்தாண்டம் பஸ் நிலையத்தில் அனைத்து பஸ்களும் வந்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என அமைச்சரிடம் கோரிக்கை விடுத்தனர்.
உடனடியாக அமைச்சர் இது குறித்து அனுமதி அளித்தார். இந்த நிலையில் நேற்று முதல் திருவனந்தபுரம் பஸ்கள் அனைத்தும் மார்த்தாண்டம் பஸ் நிலையத்தில் வந்து செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியை குழித்துறை நகராட்சி தலைவர் பொன் ஆசை தம்பி முன்னிலையில் தாரகை கத்பட் எம்எல்ஏ கொடியசைத்து துவக்கி வைத்தார். மற்றும் பலர் கலந்து கொண்டனர்.