வெனிசுலா நாட்டின் எதிர்க்கட்சித் தலைவர் மரியா கொரினா மச்சாடோ, கடந்த ஆண்டு தான் பெற்ற அமைதிக்கான நோபல் பரிசுக்கான பதக்கத்தை அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்புக்கு வழங்கியுள்ளார்.
கடந்த ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு வெனிசுலா நாட்டில் ஜனநாயகம் மலர போராடிய மரியா கொரினா மச்சாடோவுக்கு அறிவிக்கப்பட்டது. அப்போதே அந்தப் பரிசை ட்ரம்ப்புக்கு அர்ப்பணிப்பதாக அவர் தெரிவித்திருந்தார். இந்நிலையில், அதிபர் ட்ரம்ப்பை வெள்ளை மாளிகையில் அவர் சந்தித்து பேசினார். அப்போது தனது நோபல் பரிசை ட்ரம்ப்புக்கு அவர் வழங்கினார்.
“அமெரிக்க அதிபர் ட்ரம்ப் வசம் அமைதிக்கான நோபல் பரிசை நான் வழங்கினேன். இது எங்கள் தேசத்தின் சுதந்திரத்துக்காக அவரது தனித்துவ அர்ப்பணிப்பிற்கான அங்கீகாரம்” என மரியா கொரினா மச்சாடோ தெரிவித்தார். வெள்ளை மாளிகைக்கு வெளியே பத்திரிகையாளர்களை அவர் சந்தித்தார். அப்போது அவரது ஆதரவாளர்கள் அங்கு திரண்டது குறிப்பிடத்தக்கது.
நோபல் பரிசை தனக்கு வழங்கிய மச்சாடோவுக்கு சமூக வலைதள பதிவு மூலம் அதிபர் ட்ரம்ப் நன்றி சொல்லியுள்ளார். ‘நோபல் பரிசை பெற்றவர்கள் அதை அடுத்தவருக்கு பகிரவோ, மாற்றவோ முடியாது’ என இந்த விவகாரம் தொடர்பாக நோபல் கமிட்டி குழு தெரிவித்துள்ளது.
“எனது 2-வது ஆட்சி காலத்தில் 8 மாதத்தில் 8 போர்களை நிறுத்தியதால், நோபல் பரிசு பெற, வரலாற்றில் என்னைவிட தகுதியானவர் வேறு யாரும் இல்லை. ஒபாமாவுக்கு நோபல் பரிசு கிடைத்தது. அவருக்கு அதைபற்றி எதுவுமே தெரியாது. அவருக்கு எதற்காக நோபல் பரிசு வழங்கப்பட்டது? எதுவும் செய்யாமல் அமெரிக்க அதிபராக பதவியேற்றவுடனே, அவர் நோபல் பரிசு பெற்றார்” என்று அண்மையில் கூட நோபல் பரிசு குறித்து தனது விருப்பத்தை ட்ரம்ப் வெளிப்படுத்தி இருந்தார்.
இந்நிலையில், இப்போது அவர் வசமாகியுள்ளது நோபல் பரிசு. “மரியா கொரினா மச்சாடோ அற்புதமானவர். பல்வேறு சவால்களை கடந்து வந்துள்ளார். அவர் பெற்ற அமைதிக்கான நோபல் பரிசை நான் மேற்கொண்ட பணிக்காக எனக்கு வழங்கினார். இதுவொரு பரஸ்பர மரியாதையின் மீதான அற்புத செயலாகும். மரியாவுக்கு நன்றி” என சமூக வலைதள பதிவில் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
வெனிசுலா அரசியல் சூழல்: கடந்த 3-ம் தேதி வெனிசுலா தலைநகர் கராகஸ் மீது அமெரிக்க ராணுவம் திடீர் தாக்குதலை நடத்தியது. அந்நாட்டு அதிபர் நிக்கோலஸ் மதுரோ, அவரது மனைவி சிலாயா புளோரஸ் கைது செய்யப்பட்டனர். இருவரும் அமெரிக்காவுக்கு நாடு கடத்தப்பட்டனர். தொடர்ந்து அந்நாட்டின் இடைக்கால அதிபராக துணை அதிபர் டெல்சி ரோட்ரிக்ஸ் பதவியேற்றார்.
வெனிசுலாவில் ஜனநாயக ஆட்சியை உறுதி செய்ய தான் கடமைப்பட்டுள்ளதாக அதிபர் ட்ரம்ப் அண்மையில் தெரிவித்தார். வெனிசுலாவின் இடைக்கால டெல்சி உடன் இணைந்து பணியாற்ற தயார் என்றும் அவர் சமிக்ஞை கொடுத்தது குறிப்பிடத்தக்கது. அதேநேரத்தில் மச்சாடோவுக்கு உள்நாட்டில் உள்ள ஆதரவு குறித்து ட்ரம்ப் சந்தேகத்தில் உள்ளதாகவும் தகவல். இந்த சூழலில்தான் ட்ரம்ப் மற்றும் அமெரிக்க அரசுடன் மச்சாடோ நெருக்கம் காட்டி வருகிறார்.



