Home உலக செய்திகள் அமெரிக்காவில் டேங்கர் மோதி சொகுசு கப்பல் கவிழ்ந்தது: அதிர்ஷ்டவசமாக அனைவரும் உயிர் தப்பினர்

அமெரிக்காவில் டேங்கர் மோதி சொகுசு கப்பல் கவிழ்ந்தது: அதிர்ஷ்டவசமாக அனைவரும் உயிர் தப்பினர்

0

அமெரிக்காவின் நியூ ஆர்லியன்ஸ் மாகாணத்தில் மிசிசிப்பி ஆற்றில் நின்றிருந்த சொகுசுக் கப்பல் மீது டேங்கர் கப்பல் மோதியது. இதில் அந்தக் கப்பல் கவிழ்ந்து மூழ்கியது.

வெள்ளிக்கிழமை நடந்த இச்சம்பவத்தில், கப்பலில் இருந்த அனைவரும் மீட்கப்பட்டனர். காயமடைந்த 32 பயணிகள் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். யாருக்கும் உயிருக்கு ஆபத்தான காயம் இல்லை.

அமெரிக்காவில் உள்ள மிசிசிப்பி ஆற்றில் ‘அமெரிக்கன் ஹெரிடேஜ்’ சொகுசுக் கப்பல் நிறுத்தப்பட்டிருந்தது. வெள்ளிக்கிழமை நண்பகலில், ‘அட்லாண்டிக் அஸ்பால்ட்’ டேங்கர் கப்பல் கட்டுப்பாட்டை இழந்து அதன் மீது பலமாக மோதியது. மோதிய வேகத்தில் சொகுசுக் கப்பல் நீரில் மூழ்கத் தொடங்கி, இறுதியில் ஒரு பக்கமாக சாய்ந்து கவிழ்ந்தது. பல பயணிகள் அலறியவாறே ஆற்றில் விழுந்தனர் அல்லது குதித்தனர்.

விபத்தின்போது கப்பலில் பயணிகளும் ஊழியர்களும் சேர்ந்து 180 முதல் 190 பேர் இருந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த மீட்புக் குழுவினர், தீயணைப்புத் துறையினர், துறைமுகப் பணியாளர்கள், அருகிலிருந்த படகுகளில் சென்றவர்கள் உடனடியாகச் செயல்பட்டு மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.

டேங்கரின் திசைமாற்றும் அமைப்பில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறே விபத்துக்குக் காரணம் என்று அமெரிக்க கடலோரக் காவல்படை அதிகாரி மெலனி பர்ஹாம் தெரிவித்தார். இது குறித்த விசாரணை தொடர்கிறது.

விபத்தைத் தொடர்ந்து அப்பகுதியில் கப்பல் போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட பயணிகளுக்குத் தேவையான உதவிகளை வழங்கி வருவதாகவும், கடலோரக் காவல்படையுடன் இணைந்து செயல்படுவதாகவும் கப்பலை இயக்கும் ‘அமெரிக்கன் குரூஸ் லைன்ஸ்’ நிறுவனம் தெரிவித்துள்ளது. 2015-ல் கட்டப்பட்ட ‘அமெரிக்கன் ஹெரிடேஜ்’ கப்பல், 150 பேர் பயணிக்கும் திறன் கொண்டது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version