ஒரே வேலை, ஒரே ஊதியம் கோட்பாட்டின்படி எய்ம்ஸ்-க்கு இணையாக அரசு மருத்துவர்களுக்கு ஊதியம் வழங்க தமிழக அரசுக்கு உத்தரவிடுமாறு தேசிய மருத்துவ ஆணையத்துக்கு அரசு மருத்துவர்கள் கடிதம் எழுதியுள்ளனர்.
இதுதொடர்பாக அரசு மருத்துவர்களுக்கான சட்டப்போராட்டக் குழு தலைவர் மருத்துவர் எஸ்.பெருமாள் பிள்ளை கூறியதாவது: நாடு முழுவதும் மருத்துவ கல்லூரிகளில் படிக்கும் பயிற்சி மருத்துவர்கள் மற்றும் முதுகலை மருத்துவ மாணவர்களுக்கு உரிய உதவித்தொகை தரப்பட வேண்டும் என தேசிய மருத்துவ ஆணையம் (என்எம்சி) அறிவுறுத்தியது. இதையடுத்து, சட்டப்போராட்டக் குழு தேசிய மருத்துவ ஆணையத்துக்கு கோரிக்கை மனு ஒன்றை கடந்த ஆண்டு ஏப்ரல் 23-ம் தேதி அனுப்பியது.
அந்த மனுவில் பயிற்சி மருத்துவர்களுக்கு உரிய உதவித்தொகை கிடைப்பதற்கான நடவடிக்கையை வரவேற்கிறோம். அதேநேரத்தில் மருத்துவக் கல்லூரிகளில் இளைய மருத்துவர்களை உருவாக்கி வரும் மருத்துவ ஆசிரியர்களுக்கு உரிய ஊதியம் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டியதும் ஆணையத்தின் கடமை என்பதை குறிப்பிட்டு, அதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டுகோள் வைக்கப்பட்டது.
நாடுமுழுவதும் அரசு மருத்துவர்களுக்கு எய்ம்ஸ்-க்கு இணையான ஊதியம் தரப்பட வேண்டும் என ஆணையத்தின் அறிவுறுத்தலை, தமிழக அரசு இதுவரை நடைமுறைப்படுத்தவில்லை. அதனால், மீண்டும் தேசிய மருத்துவ ஆணையத்தின் கவனத்துக்கு கொண்டு சென்று இருக்கிறோம். மற்ற மாநிலங்களில் முதுகலை மருத்துவ மாணவர்களுக்கு தரப்படும் உதவித்தொகையைவிட மிகவும் குறைவாக, தமிழகத்தில் அனுபவம் உள்ள சிறப்பு மருத்துவர்களுக்கு ஊதியம் தரப்படுகிறது.
மருத்துவர் பணியிடங்கள்: தமிழகத்தில் 37 அரசு மருத்துவக் கல்லூரிகள் உட்பட 70-க்கும் மேற்பட்ட மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. ஒன்றரை லட்சத்துக்கும் அதிகமான மருத்துவர்கள் இருக்கும் நிலையில், அரசு மருத்துவர்களின் எண்ணிக்கை 19 ஆயிரம் மட்டுமே உள்ளது.
அரசு மருத்துவமனைகளில் நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப மருத்துவர் பணியிடங்கள் உருவாக்க வேண்டும். அப்போதுதான் மக்களுக்கு மருத்துவ சேவை எளிதாக கிடைப்பதை உறுதி செய்ய முடியும். சுகாதாரத் துறையில் முன்னணி மாநிலமாக உள்ள தமிழகத்தில் மருத்துவர்கள் பணிச்சுமை, குறைவான ஊதியத்துடன் பணிபுரிந்து வருகின்றனர்.
இன்று நாட்டிலேயே தமிழகத்தில்தான் அரசு மருத்துவர்கள் உயிரிழப்பு அதிகமாக உள்ளது. எனவே ஒரே வேலை, ஒரே ஊதியம் என்ற கோட்பாட்டின்படி, தமிழகத்தில் அரசு மருத்துவர்களுக்கு எய்ம்ஸ் மருத்துவர்களுக்கு இணையான ஊதியம் தர அரசுக்கு உத்தரவிட வேண்டுகிறோம். இதன்மூலம் மருத்துவர்கள் மன நிம்மதியுடனும், உற்சாகத்துடனும் பணி செய்திட வழிவகுக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.














