குமரி மாவட்டத்தில் போக்குவரத்து விதிகளை மீறும் வாகன ஓட்டிகள் மீதான நடவடிக்கையை தீவிரப்படுத்த போலீசாருக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதனால் மாவட்டம் முழுவதும் வாகன ரோந்து மற்றும் கண்காணிப்பு பணிகளில் போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர். அதன்படி நாகர்கோவில் மாநகர பகுதிகளில் நேற்று போக்குவரத்து ஒழுங்குப்பிரிவு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது ஒழுகினசேரி பகுதியில் மது போதையில் டெம்போ ஓட்டி வந்த டிரைவருக்கு ரூ. 10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. இதே போல கலெக்டர் அலுவலக சந்திப்பில் மோட்டார் சைக்கிள் ஓட்டி வந்த 2 வாலிபர்களை மடக்கி பிடித்து சோதனை செய்தனர். அப்போது அவர்களிடம் ஓட்டுனர் உரிமம் இல்லாததும் மது போதையில் இருந்ததும் தெரிய வந்தது. இதையடுத்து வாலிபர்கள் 2 பேருக்கும் தலா ரூ. 12. ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டு, வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.














