சர்வதேச அளவில் போலீஸ் மற்றும் தீயணைப்பு துறையினருக்கான தடகளப் போட்டிகள் அமெரிக்காவில் உள்ள அலபாமாவின் பர்மிங்காமில் கடந்த மாதம் 27-ந் தேதி முதல் 6-ந் தேதி வரை நடைபெற்றது.
இந்த போட்டியில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் என மொத்தம் 1000-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். இந்தியா சார்பில் இப்போட்டியில் கன்னியாகுமரி மாவட்டம் மண்டைக்காடு போலீஸ் நிலையத்தில் பணிபுரியும் பெண் தலைமை காவலர் கிருஷ்ண ரேகா கலந்து கொண்டார். அவர் உயரம் தாண்டுதல், மும்முறை தாண்டுதல் மற்றும் தடை தாண்டும் ஓட்டம் ஆகிய போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்றார்.
கிருஷ்ண ரேகா மூன்று தங்கப் பதக்கங்களை வென்றுள்ளார். தங்கப் பதக்கம் வென்ற கிருஷ்ண ரேகாவை நாகர்கோவிலில் உள்ள மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் வைத்து போலீஸ் சூப்பிரண்டு ஸ்டாலின் நேற்று பாராட்டி வாழ்த்தினார்.