கவிஞர் குமரி ஆதவன் எழுதிய கேட்கச் செவியுள்ளவர் கேட்கட்டும், எரிதழல் கொண்டு வா ஆகிய இரு நூல்களின் ஆங்கிலம் (Let them hear who have Ear) மற்றும் மலையாள மொழிபெயர்ப்பு (കനല്കട്ടകള്) நூல்களின் வெளியீட்டு விழா கருங்கல் புனித அல்போன்சா கலை அறிவியல் கல்லூரியில் நேற்று நடைபெற்றது.
நிகழ்விற்கு கல்லூரி தாளாளர் அருட்பணியாளர் ஆண்டனி ஜோஸ் தலைமை ஏற்றார். ஏபிஜெஎம் பள்ளி தலைமையாசிரியர் அருட்சகோதரி றெசி முன்னிலை வகித்தார். பேராசிரியர் முனைவர் ஜெமீமா ஜோறின் அனைவரையும் வரவேற்றார். நூல்களை ஜான்சி மறைமாவட்ட ஆயர் முனைவர் பீட்டர் பாராபுல்லில் வெளியிட, பணி நிறைவு பெற்ற நாகலாந்து துணைவேந்தர் முனைவர் ஜோசப் டன்ஸ்டன் பெற்றுக் கொண்டு உரையாற்றினார். முட்டம் ஆஞ்சிசுவாமி கல்வியியல் கல்லூரி முன்னாள் பேராசிரியர் புஸ்பதாஸ் நூல் ஆய்வுரை வழங்கினார்.
எழுத்தாளர்கள் சப்திகா, கவிஞர் ஆகிரா, தூத்தூர் புனித யூதா கல்லூரி பணி நிறைவு பேராசிரியர் சேவியர் தாஸ் ஆகியோர் நூல் குறித்து பேசினர். நூல் மொழிபெயர்ப்பாளர்கள் ஏபிஜெஎம் பள்ளி ஆங்கில ஆசிரியர் தனிஷா, பணி நிறைவு பெற்ற அல்போன்சா கல்லூரி மலையாள பேராசிரியர் பங்கசாட்ஷன் ஆகியோர் ஏற்புரை வழங்கினர். நூலாசிரியர் குமரி ஆதவன் நிறைவுரை வழங்கினார்.