கருங்கல் அருகே செல்லங்கோணம் பகுதியைச் சேர்ந்தவர் பிரான்சிஸ் (46). கான்ட்ராக்டர். இவர் கடந்த 6.3.2018 அன்று தனது மகளை அதே பகுதியைச் சேர்ந்த ஒரு கும்பல் கல்லூரிச் செல்லும் வழியில் கேலி செய்வதாக கருங்கல் காவல் நிலையத்தில் புகார் கூறினார். பிரான்சிஸ் காவல் நிலையத்தில் ஆஜராகி விட்டு இரவு வீட்டிற்குப் பைக்கில் சென்றுகொண்டிருக்கும்போது, அவரது மகளைக் கேலி செய்த கும்பல் பிரான்சிசைக் கொலை செய்தது.
இதுதொடர்பாக பிரான்சிஸின் மனைவி மேரி என்பவர் புகார் அளித்ததன் பேரில் 4 பேர் கும்பலைப் போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கில் நான்காவது குற்றவாளி அதே பகுதியைச் சேர்ந்த சுபி (40) என்பவர் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் 7 ஆண்டுகளாகத் தலைமறைவாக இருந்தார். அவரைக் கைது செய்ய போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை என பிரான்சிஸ் குடும்பத்தினர் குற்றம்சாட்டி வந்தனர். இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு பிரான்சிஸின் மனைவி மேரி, குமரி எஸ்பி ஸ்டாலினை நேரில் சந்தித்துப் புகார் செய்தார். எஸ்பி உத்தரவின் பேரில் கருங்கல் போலீசார் சுபியைக் கேரள மாநிலம் சங்கனாச்சேரி என்ற பகுதியில் நேற்று கைது செய்தனர். அவரைப் பத்மநாபபுரம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.