லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்தத்தால் கர்நாடக மாநிலத்துக்கு தினமும் ரூ.4,000 கோடி இழப்பு

0
179

லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்தம் காரணமாகக் கர்நாடகாவுக்கு தினசரி ரூ.4,000 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது எனத் தென் மாநில லாரி உரிமையாளர்கள் நலச்சங்க பொதுச்செயலாளர் தெரிவித்துள்ளார்.

டீசல் மற்றும் சுங்கக் கட்டணம் உயர்வைக் கண்டித்து, கர்நாடக மாநில லாரி உரிமையாளர்கள் நேற்று முன்தினம் முதல் வேலைநிறுத்தம் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், லாரி உரிமையாளர்கள் மற்றும் கர்நாடக அரசு அதிகாரிகளிடையே நேற்று நடந்த பேச்சு வார்த்தை தோல்வியில் முடிந்தது.

இதனால், நேற்று 2-வது நாளாக லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்தம் தொடர்ந்தது. இதனிடையே, தமிழகம் பதிவெண் கொண்ட சரக்கு வாகனங்கள் ஓசூர் வழியாக வழக்கம்போல, கர்நாடக மாநிலத்துக்குச் சென்று வந்தன.

இதனிடையே, ஓசூரில் தென் மாநில லாரி உரிமையாளர்கள் நலச்சங்க பொதுச்செயலாளர் சண்முகப்பா, செய்தியாளர்களிடம் கூறும்போது, “கர்நாடக மாநில லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்தம் காரணமாக அங்கு 95 சதவீத லாரிகள் ஓடவில்லை. இதனால், கர்நாடகவுக்கு தினசரி ரூ.4,000 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.

நாசிக் பகுதியிலிருந்து லாரிகளில் வெங்காயம் மற்றும் பருப்பு கர்நாடகாவுக்கு வரவில்லை. மேலும். கர்நாடக மாநிலத்திலிருந்து அதிகமான பொருட்கள் பிற மாநிலங்களுக்குச் செல்வதும் நின்று விட்டது. தமிழகத்திலிருந்து கட்டுமான பொருட்கள் கர்நாடகாவுக்கு வருவது நின்றுள்ளது. போராட்டம் தீவிரமானால் பாதிப்பு அதிகரிக்கும்” என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here