களியக்காவிளை அருகே குந்நுவிளை பகுதியில் வசித்து வரும் மூதாட்டி சந்திரிகா தேவி (65), இவர் தனது கணவன் பல ஆண்டுகளுக்கு முன்பு இறந்த நிலையில் மகன் மற்றும் மருமகள், பேத்தி கைக்குழந்தையுடன் வசித்து வருகின்றனர்.
சந்திரிகா தேவி வீட்டிற்கு செல்ல பரம்பரை பரம்பரையாக சுமார் நூறு ஆண்டுகளுக்கு மேல் பயன்படுத்தி வந்த பொது பாதையை அருகாமையில் வசிக்கும் அதே பகுதியை சேர்ந்த உதய குமார் (50) என்பவர் இரவோடு இரவாக கேட் போட்டு பாதையை அடைத்துள்ளார். காலையில் சந்திரிகா தேவி மற்றும் குடும்பத்தினர் பார்த்த போது பாதையை அடைத்து வைத்திருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் களியக்காவிளை காவல் நிலையத்தில் தகவல் தெரிவித்தார்.
தொடர்ந்து அப்பகுதிக்கு வந்த களியக்காவிளை போலீசார் உதய குமார் இடம் பாதையை திறந்து கொடுக்க கேட்டு கொண்டும் உதய குமார் மறுப்பு தெரிவித்ததை தொடர்ந்து போலீசார் அவரை காவல் நிலையத்தில் அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். பரம்பரை பரம்பரையாக பயன்படுத்தி வந்த பொது பாதையை அடைத்ததால் மூதாட்டியின் குடும்பம் அவதிக்குள்ளாகி உள்ளனர்.