ஜப்பானில் சமீபத்தில் முடிவடைந்த ஆசிய விளையாட்டுப் போட்டியில் கபடியில் இந்திய மகளிர் அணி தங்கப் பதக்கம் வென்றிருந்தது. இந்த அணியில் நட்சத்திர வீராங்கனையும் முன்னாள் கேப்டனுமான இமாச்சல் பிரதேசத்தை சேர்ந்த ரிது நேகியும் இடம் பெற்றிருந்தார்.
இந்நிலையில் ஆசிய விளையாட்டு போட்டியில் பதக்கம் வென்ற இமாச்சல் பிரதேசத்தை சேர்ந்த வீரர், வீராங்கனைகளுக்கு அம்மாநில அரசு ஊக்கத் தொகையை அறிவித்தது. இதில் ரூ.1 கோடிக்கான பரிசு பெறுவோர் பட்டியலில் ரிது நேகி இடம் பெற்றிருந்தார். ஆனால் கடைசி நேரத்தில் அவரது பெயர் நீக்கப்பட்டது.
அர்ஜுனா விருது பெற்றுள்ள ரிது நேகி, இமாச்சலப் பிரதேசத்தின் சிர்மோர் மாவட்டத்தில் உள்ள ஷில்லை பகுதியைச் சேர்ந்தவர். இவர் திருமணமாகி ஹரியாணா மாநிலம் பானிபட்டில் வசித்து வருகிறார்.
கடந்த அக்டோபர் 5-ம் தேதி, ஆசிய விளையாட்டுப் போட்டியில் கபடியில் தங்கம் வென்ற இந்திய மகளிர் அணியில் இடம்பெற்ற இமாச்சலப் பிரதேசத்தைச் சேர்ந்த புஷ்பா ராணா, ஜோதி தாக்குர், பவ்னா தாக்குர் ஆகிய மூன்று வீராங்கனைகளுக்கும், இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் வீராங்கனை ரேணுகா தாக்குருக்கும் தலா ரூ.1 கோடி ரொக்கப் பரிசு வழங்கப்படும் என்று மாநில முதல்வர் சுக்விந்தர் சிங் சுகு அறிவித்திருந்தார். ஆனால், இந்தப் பட்டியலில் இடம்பெற்றிருந்த ரிது நேகியின் பெயர் கடைசி நேரத்தில் நீக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இது குறித்து ரிது நேகி கூறும்போது, “ஒரு வாரத்துக்கு முன்புவரை நான் இமாச்சலப் பிரதேசத்தின் மகளாகவே இருந்தேன். முதல்வர்கூட எனக்கு வாழ்த்து தெரிவித்து முகநூலில் பதிவிட்டிருந்தார். ஆனால், 2 நாட்களுக்கு முன்பு திடீரென என்ன மாறியது என்று புரியவில்லை.
இந்திய ரயில்வேயில் பணியாற்றினாலும், உள்நாட்டுப் போட்டிகளில் இமாச்சலப் பிரதேசத்துக்காகவே விளையாடி வருகிறேன். இமாச்சலப் பிரதேச அரசு ஏன் இவ்வாறு நடந்துகொள்கிறது? என்று தெரியவில்லை” என்றார்.
இமாச்சலப் பிரதேச விளையாட்டுத் துறை அமைச்சர் யத்வீந்தர் கோமா கூறும்போது, ரிது நேகியின் பெயர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டதற்கான காரணம் தனக்குத் தெரியாது. இதுதொடர்பான கோப்புகளை ஆய்வு செய்து, முதல்வருடன் ஆலோசனை நடத்துவேன்” என்றார்.
