ஐஎஸ்எல் கால்பந்து தொடரின் 13-வது சீசன் இன்று தொடங்குகிறது. 13 அணிகள் கலந்து கொள்ளும் இந்தத் தொடர் வழக்கமான முறையில் உள்ளூர் மைதானம், வெளிமாநில மைதானம் என போட்டிகள் நடைபெற உள்ளன. லீக் சுற்றின் முடிவில் முதல் இடத்தை பிடிக்கும் அணிக்கு ஷீல்டு வழங்கப்படும்.
அதேவேளையில் லீக் சுற்றின் முடிவில் முதல் 6 இடங்களை பிடிக்கும் அணிகள் பிளே ஆஃப் சுற்றில் பலப்பரீட்சை நடத்தும். இம்முறை பிரதான ஸ்பான்சராக எம்ஜி மோட்டார் நிறுவனம் இணைந்துள்ளது. மேலும் முதன்முறையாக யூடியூபில் போட்டிகள் இலவசமாக ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது.
தொடக்க நாளான இன்று மாலை 5 மணிக்கு பெங்களூருவில் உள்ள கண்டீரவா மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் பெங்களூரு எஃப்சி – எஸ்சி டெல்லி அணிகள் மோதுகின்றன. இரவு 7 மணிக்கு கோவாவில் நடைபெறும் ஆட்டத்தில் சென்னையின் எஃப்சி – எஃப்சி கோவா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
பெங்களூரு அணி உயர்மட்ட செயல் திறனை வெளிப்படுத்துவதில் கவனம் செலுத்தக்கூடும். ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த முன்கள வீரர் போர்ஜா மார்டினெஸ், போர்ச்சுகல் தற்காப்பு வீரர் சாண்ட்ரோ எம்பாலோ, அர்ஜெண்டினா நடுகள வீரர் மானுவல் டி இரியோண்டோ, நெதர்லாந்து மத்திய தற்காப்பு வீரர் மெனோ கோச், மாண்டினீக்ரோ முன்கள வீரர் மிஹைலோ பெரோவிச் ஆகியோர் பெங்களூரு எஃப்.சி அணியில் இணைந்துள்ளனர்.
இவர்களுடன் இளம் இந்திய வீரர்களான சோஹம் வர்ஷ்னேயா, வினித் வெங்கடேஷ், ஹர்ஷ் பலாண்டே ஆகியோரும் இணைந்து விளையாட உள்ளது அணிக்கு கூடுதல் பலம் சேர்க்கக்கூடும்.
