தென் ஆப்பிரிக்கா – ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி டர்பனில் நேற்று தொடங்கியது. டாஸ் வென்று பேட் செய்த ஆஸ்திரேலிய அணிக்கு தொடக்கமே அதிர்ச்சியாக இருந்தது. அதிரடி வீரரான டிராவிஸ் ஹெட் 19 பந்துகளில், 2 பவுண்டரிகளுடன் 9 ரன்கள் எடுத்த நிலையில் வியான் முல்டர் பந்தில் விக்கெட் கீப்பர் கைல் வெரெய்னிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.
10 வருடங்களுக்கு பிறகு அணிக்கு திரும்பி இருந்த மற்றொரு தொடக்க வீரரான நிக் மேடிசன் 33 பந்துகளை சந்தித்து ரன் ஏதும் எடுக்காமல் மார்கோ யான்சன் பந்தில் போல்டானார். 24 ரன்களுக்கு 2 விக்கெட்களை இழந்த நிலையில் களமிறங்கிய ஸ்டீவ் ஸ்மித், மார்னஸ் லபுஷேனுடன் இணைந்து பார்ட்னர்ஷிப்பை கட்டமைக்க முயன்றார். மார்னஸ் லபுஷேன் 37 ரன்கள் எடுத்த நிலையில் வியான் முல்டர் பந்தில் எல்பிடபிள்யூ ஆனார்.
ஸ்டீவ் ஸ்மித் 25 ரன்களில் மார்கோ யான்சன் பந்தில் கல்லி திசையில் வியான் முல்டரிடம் பிடிகொடுத்து வெளியேறினார். 3-வது விக்கெட்டுக்கு லபுஷேன், ஸ்மித் ஜோடி 60 ரன்கள் சேர்த்தது. இதையடுத்து களமிறங்கிய அலெக்ஸ் கேரி 14, பியூ வெப்ஸ்டர் 4 ரன்களில் அன்ரிச் நோர்க்கியா பந்தில் நடையை கட்டினர்.
ஆஸ்திரேலிய அணி 65.2 ஓவர்களில் 6 விக்கெட்கள் இழப்புக்கு 187 ரன்கள் எடுத்திருந்த போது போதிய வெளிச்சம் இல்லாத காரணத்தால் ஆட்டம் நிறுத்தப்பட்டது. அப்போது மேட் ரென்ஷா 46, கேப்டன் பாட் கம்மின்ஸ் 33 ரன்களுடன் களத்தில் இருந்தனர்.
