ஜனவரி 14-ம் தேதி ரஜினி நடிக்கவுள்ள ‘ஜெயிலர் 2’ குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவுள்ளது.
‘கூலி’ படத்துக்குப் பிறகு மீண்டும் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நடிக்க தேதிகள் ஒதுக்கியுள்ளார் ரஜினி. ‘ஜெயிலர்’ படத்தின் 2-ம் பாகமாக உருவாகும் இப்படத்தின் ப்ரோமோ வீடியோவுக்கான படப்பிடிப்பு முடிவடைந்துவிட்டது. இதனை ஜனவரி 14-ம் தேதி மாலை 6 மணிக்கு வெளியிடவுள்ளார்கள்.
தமிழ், தெலுங்கு, இந்தி என அனைத்து மொழிகளிலும் வெளியிடுவது மட்டுமன்றி அனைத்து மாநிலங்களிலும் திரையரங்குகளிலும் திரையிட உள்ளார்கள். இதற்கான பணிகளும் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.
நெல்சன் இயக்கத்தில் ரஜினி, சிவராஜ்குமார், மோகன்லால், ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘ஜெயிலர்’. இப்படத்துக்கு மாபெரும் வரவேற்பு கிடைத்தது. இதனைத் தொடர்ந்து இதன் 2-ம் பாகத்துக்கான கதையினை உருவாக்கி வந்தார் நெல்சன். தற்போது அதன் பணிகள் முடிவடைந்து மார்ச் மாதத்தில் இருந்து படப்பிடிப்புக்கு செல்லலாம் என முடிவு எடுத்துள்ளார்கள்.
தமிழ்நாடு, கேரளா, ஹைதராபாத், மும்பை உள்ளிட்ட பல மாநிலங்களில் இதன் படப்பிடிப்பு நடைபெறவுள்ளது. முதல் பாகத்தில் பணிபுரிந்த தொழில்நுட்ப கலைஞர்களே இதிலும் பணிபுரியவுள்ளார்கள். ‘ஜெயிலர் 2’ படத்தில் ரஜினியுடன் வேறு யாரெல்லாம் நடிக்கிறார்கள் என்பது விரைவில் தெரியவரும்.