அடுத்த 3 நாட்களுக்கு தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்யும்; புயலுக்கு வாய்ப்பில்லை: பிரதீப் ஜான் கணிப்பு

0
178

அடுத்த 3 நாட்களுக்கு தமிழகம் முழுவதும் பரவலாக மழைக்கு வாய்ப்புள்ளதாகவும், அதேவேளையில் வங்கக் கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி புயலாக வலுப்பெற வாய்ப்பில்லை என்றும் ‘தமிழ்நாடு வெதர்மேன்’ என அறியப்படும் வானிலை ஆர்வலர் பிரதீப் ஜான் கணித்துள்ளார்.

தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதையொட்டிய கிழக்கு இந்தியப் பெருங்கடல் பகுதிகளில் நேற்று முன்தினம் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றுது. இந்நிலையில், இது தொடர்பாக பிரதீப் ஜான் தனது சமூகவலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ள பதிவில், “கடலோர தமிழகத்தில் இன்று மழை தொடங்கும். ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியால் தமிழகம் முழுவதும் அடுத்த மூன்று நாட்களுக்குப் பரலாக மழை பெய்யும்.

டெல்டா மாவட்டங்களில் முதலில் மழை தொடங்கி பின்னர் கடலோர மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும். ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது வடக்கு இலங்கை – பாக் ஜலசந்தி, மன்னார் வளைகுடாவை ஒட்டி நகர்ந்து தென் தமிழகம், கேரளாவை நோக்கி நகரும். இதனால் தமிழகத்தின் உள் மாவட்டங்கள் மற்றும் மேற்கு மாவட்டங்களில் கனமழை பெய்யும்.

காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு மாவட்டங்களில் பகலில் மிதமான மழை பெய்யத் தொடங்கி மாலை, இரவில் தீவிரமடைய வாய்ப்புள்ளது. இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியானது சென்னைக்கு தொலைவில் இருந்தாலும் கூட அதன் வட பகுதியால் சென்னைக்கு மழை வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இன்று பிற்பகலிலும், நாளையும் சென்னையில் பலத்த மழைக்கு வாய்ப்புள்ளது. இருப்பினும் கனமழைக்கு வாய்ப்பில்லை. புதுச்சேரி, விழுப்புரம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி உள்ளிட்ட பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்புள்ளது.

டெல்டா ‘ஹாட்ஸ்பாட்’ – டெல்டாவில் இன்றும், நாளையும் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளது. எப்போதெல்லாம் பாக் ஜலசந்தியின் மேலே காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகிறதோ அதன் குவியல் டெல்டா மாவட்டங்கள் மீதே அமைகிறது. அதனால் நாகை, திருவாரூர், மயிலாடுதுறை, கடலூர், தஞ்சாவூர், திருச்சி, பெரம்பலூர், அரியலூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் இன்றும், நாளையும் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளது. டெல்டா பகுதிகள் தான் இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதிக்கான ‘ஹாட்ஸ்பாட்’ – ஆக திகழ்கிறது.

கொடைக்கானல், குன்னூருக்கு செல்ல வேண்டாம்.. அடுத்த 3 நாட்களுக்கு கொடைக்கானல், குன்னூர் பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம். தமிழகத்திலிருந்து கேரளா வழியாக அரபிக்கடலுக்கு காற்றழுத்த தாழ்வுப் பகுதி நகரும் போது இந்த இரு பகுதிகளிலும் உள்ள பள்ளத்தாக்குகளில் மழைக்கு வாய்ப்புள்ளது.

மேலும், கோவை, நீலகிரியில் கனமழைக்கு வாய்ப்புள்ளது. சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர், திண்டுக்கல் மாவட்டங்களிலும் கனமழைக்கு வாய்ப்புள்ளது. வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி உள்ளிட்ட வடக்கு உள் மாவட்டங்களில் ஒரு நாள் மட்டும் கனமழை முதல் மிககனமழைக்கு வாய்ப்புள்ளது.

தென் தமிழகத்தைப் பொறுத்தவரை மதுரை, தேனி, தென்காசி, விருதுநகர் மாவட்டங்களில் அடுத்த 2 முதல் 3 நாட்கள் மழை பெய்ய வாய்ப்புள்ளது. தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரியில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. ஒருவேளை காற்றழுத்த தாழ்வுப் பகுதி மதுரை வழியாக நகர்ந்தால் தென் தமிழகத்தில் கனமழை பெய்வது தவறலாம். இவ்வாறு பிரதீப் ஜான் கணித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here