கேப்டனுடன் பழகியது என் பாக்கியம் – பட்டாபி எனும் நான்: எம்.எஸ்.பாஸ்கர் | அத்தியாயம் 19

0
14

கேப்​டன் விஜய​காந்த் என் அம்மா போன்​றவர் என்​றும் அவரை சந்​தித்​தது பற்​றி​யும் கடந்த வாரம் கூறி​யிருந்​தேன். ஷூட்​டிங் வந்​தால் அவர் சேரில் உட்​கார​மாட்​டார். ஸ்டூலில்​தான் நிமிர்ந்து அமர்​வார். மற்​றவர்​களுக்கு சாப்​பாடு போட்டு அழகு பார்ப்​ப​தில் அவருக்கு அலாதி ஆனந்​தம். அவருடன் அப்​போது, நெறஞ்ச மனசு, தர்​மபுரி, எங்​கள் அண்ணா ஆகிய படங்​களில் நடித்​திருக்​கிறேன்.

படப்​பிடிப்​பில் நான் எங்​காவது தூரத்​தில் இருந்​தால், “ஏய் பாஸ்​கர், அங்க என்ன பண்ற? இங்க வா” என்​பார். அழைத்து அவர் அரு​கில் உட்​கார வைத்​துக் கொள்​வார். வெளியூர்​களில் நடக்​கும் படப்​பிடிப்​பு​களில் அவருடைய ரசிகர்​கள், அன்​பர்​கள் தங்​கள் வீட்​டிலிருந்து சாப்​பாடு கொண்டு வந்து கொடுப்​பார்​கள். அவர் அதை அரு​கில் உள்ள எல்​லோருக்​கும் பிரித்​துக் கொடுப்​பார்.

படப்​பிடிப்​பில் சாப்​பாடு, கல்​யாண பந்தி மாதிரி நடக்​கும். நடிகர்​களுக்கு என்று தனி​யாக கிடை​யாது. எல்​லோரும் ஒன்​று​தான் என்​பது அவர் எண்​ணம். அவருக்கு என்ன வகை சாப்​பாடு வரு​மோ, அது​போலத்​தான் மற்​றவர்​களுக்​கும் கொடுக்க வேண்​டும் என்று சொல்​வார். படப்​பிடிப்​புக்கு வேடிக்கை பார்க்க வந்​திருப்​பவர்​களை​யும் சாப்​பிடச் சொல்​வார். அப்​படி ஒரு தங்​க​மான குணம்.

எனக்கு எப்​போதும் எவ்​வளவு தேவையோ, அந்​தளவு மட்​டுமே வாங்கி சாப்​பிடு​வது வழக்​கம். அதை மீறி உணவை வீணாக்​க​வும் மாட்​டேன். அது எனக்​குப் பிடிக்​காத ஒன்​று. ஆனால், விஜய​காந்த் அண்​ணன் அரு​கில் உட்​கார்ந்​தால், அது நடக்​காது. அவர் அன்​பால் என் சாப்​பாட்டு அளவு கூடி விடும்.

வாழை இலை விரித்​திருப்​பார்​கள். அதன் முன் அமர்​வேன். ஒரு பெரிய கரண்​டி​யில் மட்​டன் வைக்​கச் சொல்​வார். அடுத்து சிக்​கன் வைக்​கச் சொல்​வார். “இப்​படி வச்சா எப்​படி சாப்​பிடறது?” என்று கேட்​டால், “இங்க பாரு பாஸ்​கரு கோபப்​படறாப்ல, இன்​னொரு கரண்டி சிக்​கனை வையி” என்​பார்.

“இலை பாதி மூடிருச்​சே, எப்​படிண்ணே சாப்​பிட?” என்று கேட்​டால், “சிக்​க​னுக்​கும் மட்​ட​னுக்​கும் இடை​யில சாதம் வையுங்க” என்​பார். பேன்ட் பட்​டனை அவிழ்த்து விட்​டுக்​கொண்டு சாப்​பிடு​வேன். “சாப்​பிட முடியலை” என்று சொன்​னால் அதை ரசித்​துக்​கொண்​டே, “பொறுமை​யா, மெதுவா சாப்​பிடு, இப்ப என்ன அவசரம்?” என்​பார்.

வயிறு வீங்​கி​விடும். சாப்​பிட்டு எழுந்​தால் கண்ணை இறுக்​கிக் கொண்டு தூக்​கம் வரும். அப்​போது, குறைந்​தது அரை லிட்​டர் அளவு பாயசத்​தைக் கொண்டு வந்​து, அண்​ணன் கொடுக்​கச் சொன்​னார் என்று நீட்​டு​வார்​கள். “வயிறு முட்​டிருச்​சி, இதுக்கு மேல இடமில்​லை” என்று சொன்​னால், “நீங்க குடிக்​கலைன்​னா, அண்​ணன் எங்​களை திட்​டு​வாரு” என்று சொல்​லிக் குடிக்​கச் சொல்​வார்​கள். திக்​கு​முக்​காட வைக்​கும் அன்பு என்​பார்​களே, அதை அவரிடம்​தான் பார்க்க முடி​யும்.

“இவ்​வளவு சாப்​பிட்ட பிறகு, மதி​யம் ரெண்டு மணி ஷாட்​டுக்கு எப்​படி வர முடி​யும்?” என்று கேட்​டால், இயக்​குநரை அழைத்து “பாஸ்​கரு நல்லா சாப்​பிட்​டுட்​டான். ஒரு நாலு மணிக்கு ஷாட்​டுக்கு வரச் சொல்​லலா​மா?” என்று கேட்​பார். சரி என்​பார் அவர். பிறகு எங்​காவது மரத்​தடி​யில் போய் துணியை விரித்து படுத்​து​விடு​வேன்.

மரத்​தடி​யில் காற்று நன்​றாக வரும் என்​ப​தால் நிம்​ம​தி​யாக தூங்க ஆரம்​பிப்​பேன். அப்​போது சின்ன சின்ன கற்​களை எடுத்து என் மீது வீசி​விட்​டு, ஒன்​றும் தெரி​யாத மாதிரி திரும்​பிக்​கொள்​வார். அது அவர் வேலை​தான் என்​பது தெரி​யும். ஆனால், நானும் தெரி​யாதது போல, “யாருங்க கல்லை எறியறது?” என்று சும்மா சொல்​லி​விட்டு படுப்​பேன். மீண்​டும் கல் வரும்.

இப்​படியொரு குழந்தை மனது அவருக்​கு. பிறகு நான்கு மணிக்கு எழுந்து முகத்​தைக் கழு​வி​விட்டு ஸ்பாட்​டுக்கு வந்​தால் முகம் நன்​றாக வீங்​கி​யிருக்​கும். பார்த்து ரசித்து சிரிப்​பார். தர்​மபுரி படப்​பிடிப்​பில் இருந்​த​போது எனக்கு ஐம்​ப​தாவது பிறந்த நாள். அதை நான் யாரிட​மும் சொல்​ல​வில்​லை.

அங்​கிருந்த உதவி இயக்​குநர் ஒரு​வருக்கு அது எப்​படியோ தெரிந்​திருக்​கிறது. தகவல், கேப்​ட​னுக்கு சென்​றதும் என்னை அழைத்​தார். ஒரு சால்​வையை போர்த்​தி, பொக்கே கொடுத்து என்​னைக் கட்​டிப்​பிடித்து புகைப்​படம் எடுக்க சொன்​னார். அவர் நிஜ​மாகவே ‘நெறஞ்ச மனசுக்​காரர்​’​தான்.

அவருடைய ‘எங்​கள் அண்​ணா’ படத்​தில் நான் குடி​காரர் கேரக்​டரில் நடித்​தேன். என் நடிப்பை அப்​படி ரசித்​தார். “தத்​ரூபமா அப்​படியே ஒரு குடி​காரனை உரிச்சி வச்​சிருக்கே பாஸ்​கர். இப்​படி பல குடி​காரர்​களை ரோட்​டுல பார்த்​திருக்​கேன்” என்​றார். எனக்​கான பொழுது​போக்​கு​களில் எங்​காவது சாலை​யின் ஓரத்​தில் காரை நிறுத்​தி​விட்​டு, மனிதர்​களின் உடல் மொழியை ரசிப்​பது உண்​டு.

பலமுறை டாஸ்​மாக் கடைகளின் முன்​னால் ஓரமாக காருக்​குள் அமர்ந்து மதுகுடித்து விட்டு தள்​ளாடியபடி வருபவர்​களின் உடல் மொழியை கவனித்​திருக்​கிறேன். சிலரைப் பார்த்​தால் சிரிப்​பும் வரும். அப்​படி கவனித்​து​தான் ‘எங்​கள் அண்​ணா’ படத்​தில் அந்த கதா​பாத்​திரத்​தைச் செய்​தேன். அதை இயல்​பாக இருக்​கிறது என்று கேப்​டன் விஜய​காந்த் அண்​ணன் பாராட்​டியது என்​னால் மறக்க முடி​யாது.

பிறகு எங்கு படப்​பிடிப்​புக்கு சென்​றாலும் என்னை போல் இருப்​பவர்​களை அவர் அரு​கில் உட்​கார வைத்​துக்​கொள்​வார். நன்​றாக அரட்டை அடிப்​பார். யாருக்​கும் தெரி​யாமல் பல உதவி​களைச் செய்​திருக்​கிறார். ஒரு முறை, படிப்​ப​தற்​குப் பண உதவி கேட்டு கோவை​யில் இருந்து ஒரு பையன் அவர் அலு​வல​கத்​துக்கு வந்​திருக்​கிறான். அண்​ணன் அங்கு இல்​லை. பிறகு அவரிடம் விஷ​யத்​தைச் சொன்​னார்​கள்.

உடனடி​யாக அண்​ணனுக்கு வேண்​டிய கோவையைச் சேர்ந்த ஈஸ்​வரனுக்​குப் பணம் அனுப்​பி, அந்த பையனுக்கு கொண்டு போய் கொடு என்​றார், அவர் அந்​தப் பையனைப் போய் பார்த்​தால், அவன் சிலருடன் கேரம் போர்டு விளை​யாடிக் கொண்​டிருந்​தான். நல்ல வசதி​யான வீட்டு பையன் என்​பதும் தெரிய வந்​திருக்​கிறது. வீட்​டில் செல​வுக்​குப் பணம் கொடுக்க மாட்​டார்​கள் என்​ப​தால் இப்​படி வந்து கேட்​டிருக்​கிறான் என்​பதும் தெரிந்​தது. இதை ஈஸ்​வரன், கேப்​டனிடம் சொல்லி விட்​டு, “அவனுக்​குப் பணம் கொடுக்க வேண்​டாம்” என்​றார்.

உடனே கேப்​டன், “இல்ல. அவனுக்​குப் பணம் தர்​றேன்னு வாக்கு கொடுத்​துட்​டேன். அதனால அந்​தப் பணத்தை அவன்​ கிட்ட கொடுத்​துட்டு இனிமே இது​போல பண்​ணாதேன்னு சொல்​லிருங்க” என்​றார். அவ்​வளவு உயர்ந்த உள்​ளம் அவருக்​கு! யாரும் கஷ்டப்​படக்​கூ​டாது. எல்​லாரும் நன்​றாக இருக்க வேண்​டும் என்று நினைப்​பவர் அவர். அவரைப் பின்​பற்றி இப்​போது என்​னால் முடிந்த உதவி​களை நானும் செய்து கொண்​டிருக்​கிறேன்.

எனக்கு சினிமா வாய்ப்​பு​கள் அதி​கம் வராத காலத்​தில், நடிகர் சங்க உறுப்​பினர் ஆக நினைத்​தேன். ஏற்​கெனவே டப்​பிங் யூனியன், சின்​னத்​திரை நடிகர் சங்​கங்​களில் உறுப்​பின​ராக இருந்​தேன். அதனால் இதி​லும் உறுப்​பின​ராக நினைத்​து, நடிகர் சங்​கத்​துக்​குச் சென்​றேன். அப்​போது நடிகர் கே.என்​.​காளை அங்கு இருந்​தார். அவரை அன்​போடு சித்​தப்பா என்று அழைப்​பேன். அவரிடம் விஷ​யத்​தைச் சொன்​னேன். ”

சாயங்​காலம் வா, தலை​வர்ட்ட கூட்​டிட்​டுப் போறேன்” என்​றார். தலை​வ​ராக விஜய​காந்த் அண்​ணன் இருந்​தார். அவர் சொன்​னது போல மாலை​யில் சென்​றேன். அவர் கூட்​டிச் சென்​றார். அவர் அறைக்​குச் சென்​றதும், “என்ன பாஸ்​கர் எப்​படி​யிருக்​கே?” என்​றார். “நல்​லாருக்​கேண்​ணே, நடிகர் சங்க உறுப்​பின​ராகணும்” என்​றேன். “அதுக்​கென்ன கார்டு கொடுத்​திடலாம்” என்​றார்.

“இல்ல எங்​கிட்ட அவ்​வளவு பணம் இல்​லை. சரியா வாய்ப்​பு​களும் வரலை, பத்து பதினைந்​தா​யிரம்​தான் இருக்​கு” என்று சொன்​னேன். “முதல்ல கார்டு வாங்​கிரு, அப்​புறம் பார்த்​துக்​கலாம்” என்று சொன்​னவர் அந்​தப் பணத்தை வாங்​க​வில்​லை. பிறகு நான்பணமே கட்​ட​வில்​லை. அவர்​தான் எனக்​காகக் கட்​டி​யிருப்​பார் என்று நினைக்​கிறேன்.

அவர் கையெழுத்து போட்​டுக் கொடுத்த அந்த நடிகர் சங்க உறுப்​பினர் கார்டை இன்​றும் பொக்​கிஷ​மாக வைத்​திருக்​கிறேன். அது ஆயுட்​கால உறுப்​பினர் கார்​டு. இது​போல எனக்கு மட்​டுமல்ல பலருக்கு பேருதவி​கள் செய்​தவர் அண்​ணன் விஜய​காந்த். அவர் இருந்​தா​லும் மறைந்​தா​லும்​ எனக்​கு அண்​ணன்​, அம்​மா​தான்​. இந்​தப்​ பிற​வி​யில்​ அவரை நான்​ பார்​த்​ததும்​ பழகியதும்​ என்​ ​பாக்கியம்​ என்​றே கருதுகிறேன்​.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here