சூரிய ஒளிவட்டத்தை ஆய்வு செய்ய ஐரோப்பிய யூனியனின் புரோபா-3 விண்கலத்தை, பிஎஸ்எல்வி -எக்ஸ்எல் ராக்கெட் மூலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து இஸ்ரோ அடுத்த மாதம் விண்ணுக்கு அனுப்புகிறது என மத்திய இணையமைச்சர் ஜித்தேந்திர சிங் நேற்று கூறினார்.
இந்திய விண்வெளி கருத்தரங்கம் 3.0 புதுடெல்லியில் நேற்று நடைபெற்றது. இந்த கருத்தரங்கில் பங்கேற்ற அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை இணையமைச்சர் ஜித்தேந்திர சிங் அளித்த பேட்டியில் கூறியதாவது:
சூரியனின் ஒளிவட்டம் பற்றிய ஆய்வில் ஐரோப்பிய விஞ்ஞானிகளுடன், இஸ்ரோ விஞ்ஞானிகளும் ஈடுபடவுள்ளனர். இதற்காக ஐரோப்பிய யூனியனின் புரோபா-3 விண்கலத்தை இஸ்ரோ பிஎஸ்எல்வி-எக்ஸ்எல் ராக்கெட் மூலம் அடுத்த மாதம் விண்ணுக்கு அனுப்புகிறது. இந்த புரோபா-3 விண்கலத்தில் இரண்டு செயற்கைக்கோள்கள் இருக்கும். இவை ஒன்றாக இணைந்து செயல்படும். 144 மீட்டர் நீளமுள்ள இந்த சாதனம் சோலார் கார்னோகிராப் என அழைக்கப்படும். இது சூரியனின் கரோனா என்ற பிரகாசமான ஒளிவட்ட பகுதியை ஆய்வு செய்ய உதவும்.
சூரியனை துல்லியமாக ஆய்வு செய்வதற்காக உலகில் முதல் முறையாக மேற்கொள்ளப்படும். இந்த ஆய்வில், சூரியனின் ஒளிவட்டப்பகுதி விரிவாக ஆய்வு செய்யப்படும். கடந்த 70 ஆண்டுகளாக ஒரு குறிப்பிட்ட நாடுகள் மட்டுமே விண்வெளி ஆய்வில் ஈடுபட்டன. 2023-ம் ஆண்டின் புதிய விண்வெளி கொள்கை மூலம் விண்வெளித் துறை, பொதுத்துறைக்கு திறந்துவிடப்பட்டுள்ளது. இது தொழில்துறையில் குறிப்பிடத்தக்க வளர்ச்சியை ஏற்படுத்தும்.
2035-ம் ஆண்டுக்குள் விண்வெளி மையத்தை அமைக்கவும், 2040-ம் ஆண்டுக்குள் நிலவில் முதல் இந்திய வீரரை தரையிறக்கவும் இந்தியா திட்டமிட்டுள்ளது. தற்போது நாட்டில் உள்ள பெரும்பாலான துறைகள் விண்வெளி தொழில்நுட்பத்தை பயன்படுத்துகின்றன. நேவிகேஷன் தகவல்களை அளித்தல், செயற்கைகோள் படங்களை அனுப்புதல் மூலம் ஸ்மார்ட் நகரங்கள் உருவாக்குதை விண்வெளி தொழில்நுட்பம் ஊக்குவிக்கிறது. உலக விண்வெளி பொருளாதாரத்தில் இந்தியாவின் பங்களிப்பு தற்போது 2 சதவீதமாக உள்ளது. இது வரும் ஆண்டுகளில் 10 சதவீதமாக உயரும். இவ்வாறு அமைச்சர் ஜித்தேந்திர சிங் கூறினார்.