இஸ்ரேலும் ஈரானும் போர் நிறுத்தத்துக்கு ஒப்புதல்: ட்ரம்ப் கூறுவது என்ன?

0
188

இஸ்ரேல் – ஈரான் இடையிலான 12 நாள் யுத்தம், அடுத்த 24 மணி நேரத்தில் முடிவுக்கு வருவதாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது ட்ரூத் சமூக வலைதளத்தில் வெளியிட்ட தகவலில், “அனைவருக்கும் வாழ்த்துகள்! இஸ்ரேல் – ஈரான் இடையே 12 மணி நேரத்தில் (தோராயமாக 6 மணி நேரத்தில் இஸ்ரேல் மற்றும் இரான் தங்களுடைய இறுதி மிஷன்களை நிறைவு செய்த பிறகு) முழுமையான போர் நிறுத்தம் ஏற்படும் என்று ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது. அந்த கட்டத்தில் போர் முடிந்ததாகக் கருதப்படும்.

அதிகாரபூர்வமாக, ஈரான் இந்த போர் நிறுத்தத்தை தொடங்கும். 12-வது மணி நேரத்தில், இஸ்ரேல் இந்த போர் நிறுத்தத்தை தொடங்கும். 24-வது மணி நேரத்தில், இந்த 12 நாள் போரின் அதிகாரபூர்வ முடிவு, உலகத்தால் வரவேற்கப்படும். ஒவ்வொரு போர் நிறுத்தத்தின் போதும், மறுபக்கம் அமைதியும் மதிப்பும் நிலவும். எல்லாம் சரியாக நடக்கும் என்ற அனுமானத்தில், இஸ்ரேல் மற்றும் ஈரான் ஆகிய இரு நாடுகளும் இந்த 12 நாள் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கு சகிப்புத்தன்மை, தைரியம் மற்றும் புத்திசாலித்தனம் பெற்றதற்கு நான் வாழ்த்துகிறேன்.

இது பல ஆண்டுகளாக நடந்து, முழு மத்திய கிழக்கையும் அழித்திருக்கக் கூடிய ஒரு போர். ஆனால், அது நடக்கவில்லை. ஒருபோதும் அப்படி நடக்காது. கடவுள் இஸ்ரேலை ஆசிர்வதிப்பாராக. கடவுள் ஈரானை ஆசிர்வதிப்பாராக. கடவுள் மத்திய கிழக்கை ஆசிர்வதிப்பாராக, கடவுள் அமெரிக்காவை ஆசிர்வதிப்பாராக. கடவுள் உலகை ஆசிர்வதிப்பாராக” என்று ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

அதேவேளையில், இந்த போர் நிறுத்த அறிவிப்வை இஸ்ரேல் மற்றும் ஈரான் தரப்பு உடனடியாக உறுதி செய்யவில்லை. இரு தரப்புமே தாக்குதல்களை தொடர்ந்த வண்ணம் உள்ளன.

முன்னதாக, தங்களது 3 முக்கிய அணுசக்தி நிலையங்களை தாக்கி அழித்த அமெரிக்காவுக்கு பதிலடி கொடுக்க ஈரான் முடிவு செய்தது. அதன்படி, கத்தாரில் உள்ள அமெரிக்க ராணுவத் தளத்தை குறிவைத்து ஈரான் பாலிஸ்டிக் ஏவுகணைகளை வீசியது. இதன் காரணமாக மத்திய கிழக்கில் பெரும் பதற்றம் ஏற்பட்டது. உடனடியாக கத்தார், ஐக்கிய அரபு அமீரகம், பஹ்ரைன் உள்ளிட்ட நாடுகள் தங்கள் வான் பரப்பை முழுவதுமாக மூடியதும் குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here