அதிமுக-விலிருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் இரட்டை இலை சின்னத்துக்கு சவால் விட்டிருக்கும் நிலையில், எஸ்ஐஆர் சர்ச்சை உள்ளிட்ட விஷயங்கள் தொடர்பாக அதிமுக அமைப்புச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான எஸ்.செம்மலையிடம் ‘இந்து தமிழ் திசை’க்காக பேசினோம்.
தமிழகத்தில் எஸ்ஐஆர் பணிகளுக்கு திமுக கூட்டணி கட்சிகள் ஆட்சேபம் தெரிவிக்கின்றன. உண்மையில் இந்த எஸ்ஐஆரின் நோக்கம் தான் என்ன?
தேர்தல் நேர்மையாகவும், நியாயமாகவும் நடக்க வேண்டுமானால், வாக்காளர் பட்டியல் குளறுபடிகள் அற்றதாக இருக்க வேண்டும். எஸ்ஐஆர் பணி என்பது தேர்தல் சீர்திருத்தம். இறந்தவர்கள், இடம்பெயர்ந்தவர்கள், 2 இடங்களில் பெயர் இருப்பவர்கள் இதையெல்லாம் வாக்காளர் பட்டியலில் சரிசெய்யாமல் இருப்பது தேர்தல்களில் முறைகேடு நடக்க வாய்ப்பாக அமைந்து விடுகிறது. இது போன்ற குளறுபடிகளை நீக்கி, உண்மையான வாக்காளர் பட்டியலை தயாரிக்கவே தேர்தல் ஆணையம் எஸ்ஐஆரை நடத்துகிறது. அனைத்துக் கட்சிகளுமே வாக்களிக்க தகுதியானவர்கள் மட்டுமே பட்டியலில் இடம்பெற வேண்டும் என்று தான் கருதும். ஆகவே, இதற்கு திமுக கூட்டணி கட்சிகள் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டிய அவசியம் இல்லை.
தமிழகத்தில் எஸ்ஐஆர் மூலம் சிறுபான்மையினரை கொத்துக் கொத்தாக நீக்கிவிட சாத்தியம் இருக்கிறதா?
பிஹாரில் 47 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டதை வைத்து அவர்கள் இவ்வாறு குற்றஞ்சாட்டுகின்றனர். அங்கே நீக்கப்பட்டவர்கள், வங்கதேசத்
திலிருந்து சட்டவிரோதமாக குடியேற ஊடுருவியவர்கள். அவர்கள் இந்தியர்களும் இல்லை; இந்திய குடியுரிமை பெற்றவர்களும் இல்லை. அவர்களுக்கு வாக்குரிமை கொடுக்க சட்டத்தில் இடம் இல்லை. அதனால் அவர்கள் நீக்கப்பட்டனர். இது தான் பிஹாரில் நடந்தது. அங்கு வாக்காளர்களை வேண்டுமென்றே நீக்கவில்லை. ஆனால், தமிழகத்தில் உள்ள முஸ்லிம்கள் இந்திய நாட்டின் குடிமக்கள். அவர்களை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கிவிடுவார்கள் என்பது சொத்தை வாதம்.
2026 தேர்தலில் அதிமுக அணிக்கு சாதகமான வாக்காளர் பட்டியலை தயாரிக்கும் திட்டமே இந்த எஸ்ஐஆர் என்றும் சொல்கிறார்களே..?
இது தவறான குற்றச்சாட்டு. எந்தக் கட்சிக்கும் சாதகமாகவோ பாதகமாகவோ வாக்காளர் பட்டியலை தேர்தல் ஆணையம் தயாரிக்க முடியாது. எந்த மாநிலத்தைச் சேர்ந்தவரும் வேறு மாநிலத்துக்குச் சென்று வாழலாம், குடியேறலாம், தொழில் செய்யலாம். ஒரு மாநிலத்தவர் வேறு மாநிலத்தில் நிரந்தரமாக குடியேறினால், அரசமைப்பு சட்டப்படியும், மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படியும் அவர்களுக்கு வாக்குரிமை மறுக்க முடியாது. அதேசமயம், சொந்த மாநிலத்தில் வாக்காளர் பட்டியலில் அவர்களின் பெயர் இருந்தால் தமிழகத்தில் சேர்க்க முடியாது.
தமிழர்களுக்கும், பிஹார் மக்களுக்கும் இடையே பகைமையை ஏற்படுத்தும் விதமாக பேசி இருப்பதாக பிரதமர் மோடியை திமுக கடுமையாக விமர்சிக்கிறதே?
மோடி தனது பிரச்சாரத்தில், ஆர்ஜேடி கட்சி தலைவர் தேஜஸ்வியை பார்த்து, “தமிழகத்தில் வேலை செய்யும் பிஹார் தொழிலாளர்களை திமுக தலைவர்கள் இழிவுபடுத்தி பேசுவது தெரிந்தும், அவர்களை இண்டியா கூட்டணியில் அங்கம் வகிக்க வைத்துள்ளீர்கள். திமுக தலைவர் ஸ்டாலினை பிரச்சாரத்துக்கும் அழைக்கிறீர்கள். இது எந்த வகையில் நியாயம்? இது பிஹார் மக்கள் மீது உங்களுக்கான அக்கறையின்மையைக் காட்டுகிறது” என்று குற்றம் சாட்டினார். பிஹார் தொழிலாளிகளை இழிவுபடுத்தி பேசுவதாக திமுக தலைவர்களை தான் பிரதமர் குற்றஞ்சாட்டினாரே தவிர, ஒட்டுமொத்த தமிழக மக்களை குற்றஞ்சாட்டி பேசினார் என்று கூறுவது ஏற்புடையதல்ல.
சீனியர் என்ற முறையில், செங்கோட்டையனின் நகர்வை எப்படி பார்க்கிறீர்கள்?
செங்கோட்டையனின் நடவடிக்கை ஏற்கெனவே திட்டமிட்டு அரங்கேற்றப்பட்ட ஒன்று. அவர் பொதுவெளியில் தலைமையை விமர்சிக்கிறார்; தலைமைக்கு கெடு விதிக்கிறார். கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர்களுடன் தொடர்பு வைத்துக் கொள்ளக் கூடாது என்ற கட்சியின் கட்டளையை மீறி அவர்களுடனான தொடர்பை வெளிப்படுத்துகிறார். இதையெல்லாம் பார்க்கும்போது, கட்சியில் இருந்து வெளியேற அவர் தன்னை ஏற்கெனவே தயார்படுத்திக் கொண்டு செயல்பட்டிருப்பது தெரிய வருகிறது. அவரது இந்த முடிவு தற்கொலை முயற்சிக்கு சமமானது.
செங்கோட்டையன், தினகரன், ஓபிஎஸ் ஆகியோர் தனி அணியாகச் செயல்படுவதால் அதிமுக-வின் ஓட்டு வங்கி பாதிக்கத்தானே செய்யும்?
அவர்கள் கட்சியிலிருந்து பிரிந்தவர்கள் இல்லை; கட்சியிலிருந்து நீக்கப்பட்டவர்கள். இவர்களின் கூட்டால் அதிமுக வாக்கு வங்கிக்கு எந்த சேதமும் ஏற்படாது. தனி நபர்களை நம்பி அதிமுக இல்லை. மேலும், இவர்கள் செல்வாக்கு உள்ளவர்களும் இல்லை; சக்தி படைத்தவர்களும் இல்லை. இவர்களால் ஏற்படும் கொஞ்ச நஞ்ச இழப்பையும் ஈடுசெய்ய எங்கள் பொதுச்செயலாளர் பழனிசாமி சரியான வியூகத்தை வகுப்பார்.
கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்டவர்களை மீண்டும் சேர்க்க பாஜக நெருக்கடி தருகிறதா?
அப்படியான எந்த நெருக்கடியும் வரவில்லை. அப்படிப்பட்ட நெருக்கடி எதுவும் பாஜக-விடமிருந்து வராது. உள்கட்சி விவகாரத்தில் தலையிட மாட்டோம் என்று தெளிவாக பாஜக தலைமை தெரிவித்துவிட்டது. கூட்டணியை பலவீனப்படுத்தும் நோக்கம் அவர்களுக்கு இல்லை. பாஜகவின் ஒரே நோக்கம் திமுக-வை வீழ்த்த வேண்டும் என்பதுதான்.
எம்ஜிஆர் உருவாக்கிய கட்சி விதியை மாற்றியது தவறு என்று பிரிந்து சென்றவர்கள் சொல்வதும் நியாயம் தானே?
விதிகள் திருத்தப்பட்டதாக இப்போது சொல்லும் இவர்களுக்கு, பொதுச்செயலாளர் பதவியை நீக்கிவிட்டு, ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் போன்ற பதவிகளை உருவாக்கிய போது தெரியவில்லையா? பொதுச்செயலாளர் பதவியை மீண்டும் உருவாக்கி முறையாக தேர்தல் நடத்தி பொதுச்செயலாளராக பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டதை தேர்தல் ஆணையமும், உச்ச நீதிமன்றமும் ஏற்றுக்கொண்ட பிறகும், பொதுச் செயலாளர் பதவிக்கு போட்டியிடுவதற்கான தகுதி திருத்தப்பட்டதாக குற்றஞ்சாட்டுவது எந்த விதத்தில் நியாயம்?














