நடிகை ஸ்ரீலீலா, கிரிக்கெட் வீரர் திலக் வர்மாவைக் காதலிப்பதாக வெளியான தகவலை அவர் தாயார் மறுத்துள்ளார். கடந்த ஆண்டு டிசம்பரில் திருப்பதி கோயிலுக்குத் தனது தாயாருடன் சென்று இருந்தார் நடிகை ஸ்ரீலீலா. இந்திய கிரிக்கெட் வீரர் திலக் வர்மாவும் தனது குடும்பத்தினருடன் அன்று கோயிலுக்குச் சென்றிருந்தார்.
அப்போது அவருடன் ஸ்ரீலீலாவை இணைத்து வந்த செய்தி விவாதத்தை ஏற்படுத்தியது. பின்னர் தர்மசாலாவில் நடந்த ஐபிஎல் போட்டியில், மும்பை இந்தியன்ஸ் வீரர்களுடன் ஸ்ரீலீலாவின் தாயார் சுவர்ணலதா காணப்பட்டார். தவிர, மும்பை வான்கடே மைதானத்தில் நடந்த டி20 உலகக்கோப்பை போட்டியில், திலக் வர்மாவின் பெயர் பொறித்த ஜெர்சியை அணிந்திருந்த ஒருவருடன் ஸ்ரீலீலா நின்றிருக்கும் புகைப்படங்களும் வைரலானது.
இதையடுத்து இருவரும் காதலிப்பதாக சமூக வலை தளங்களில் செய்தி பரவியது.இந்நிலையில் ஸ்ரீலீலாவின் தாயார் டாக்டர் சுவர்ணலதா அதை மறுத்துள்ளார். “சமூக வலைதளங்களில் பரவி வரும் செய்திகள் முற்றிலும் பொய்யானவை மற்றும் அடிப்படை ஆதாரமற்றவை. இதுபோன்ற கதைகள் எவ்வாறு உருவாகின்றன என்றே புரியவில்லை. இந்தச் செய்திகளில் எள்ளளவும் உண்மையில்லை, கற்பனையே” என்று அவர் தெரிவித்துள்ளார்.
