தீவிர சிகிச்சையில் ஈரானின் புதிய உச்ச தலைவர் மொஜ்தபா காமேனி?

0
22

ஈரானின் புதிய உச்ச தலைவர் மொஜ்தபா காமேனி, ஈரானின் கோம் நகரில் சுயநினைவற்ற நிலையில் மருத்துவ சிகிச்சை பெற்று வருகிறார் என ஒரு உளவுத்துறை தகவலை மேற்கோள் காட்டி டைம்ஸ் யுகே செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டது.

டைம்ஸ் யுகேவின் செய்தியின்படி, அமெரிக்கா மற்றும் இஸ்ரேல், வளைகுடா நட்பு நாடுகளுடன் பகிர்ந்து கொண்ட உளவுத்துறை தகவல்களின் அடிப்படையில், மொஜ்தபா காமேனி சுயநினைவற்ற நிலையில் இருப்பதாகவும், அவருக்கு கோம் நகரில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உச்ச தலைவர் மொஜ்தபா காமேனியின் இருப்பிடத்தை முதன்முறையாக வெளிப்படுத்தும் அந்த உளவுக் குறிப்பை தாங்கள் அறிந்ததாகவும் டைம்ஸ் யுகே குறிப்பிட்டுள்ளது. மேலும், “ஈரான் ஆட்சியின் எந்தவொரு முடிவெடுக்கும் செயலிலும் அவரால் பங்கேற்க இயலாது” என டைம்ஸ் யுகே செய்தி வெளியிட்டது.

மேற்கு ஆசியாவில் மோதல் வெடித்ததிலிருந்து, மொஜ்தபா காமேனி எந்தவொரு பொதுவெளியிலும் தோன்றவில்லை. அவர் கூறியதாகக் கூறப்படும் செய்திகளை மட்டுமே ஈரான் அரசு ஊடகங்கள் வெளியிட்டு வருகின்றன. இதற்கிடையில், அயத்துல்லா காமேனியின் உடல் கோமில் அடக்கம் செய்யத் தயாராகி வருவதாக ‘தி டைம்ஸ்’ பத்திரிகையின் செய்தி குறிப்பிட்டுள்ளது.

முன்னதாக, செவ்வாய்க்கிழமை இரவு 8:00 மணிக்குள் ஒப்பந்தத்தை எட்டுமாறு ஈரானுக்கு அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் இறுதி எச்சரிக்கை விடுத்துள்ளார். வெள்ளை மாளிகையில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய ட்ரம்ப், “அவர்களுக்கு நாளை வரை அவகாசம் உள்ளது. இப்போது என்ன நடக்கிறது என்று பார்ப்போம். அதற்குப் பிறகு, அவர்களுக்குப் பாலங்கள் ஏதும் இருக்காது. மின் நிலையங்கள் ஏதும் இருக்காது. கற்காலம் போன்ற நிலைதான் இருக்கும்,” என்று எச்சரித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here