திண்டுக்கல், தேனி மாவட்ட ஆட்சியராக இருந்த ஐஏஎஸ் அதிகாரி வெங்கடாச்சலத்தின் விருப்ப ஓய்வு ஆவணங்களை தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கொடைக்கானலைச் சேர்ந்த கோபாலகிருஷ்ணன், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனு: திண்டுக்கல், தேனி மாவட்ட முன்னாள் ஆட்சியர் வெங்கடாச்சலம்.
இவர் 2012 பிப்.29 முதல் 2018 பிப்.24 வரை ஆட்சியராக இருந்த காலத்தில் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்புத் துறைக்கு புகார் அனுப்பினேன்.
புகாரின்பேரில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில், வெங்கடாச்சலத்துக்கு முறைகேடாக விருப்ப ஓய்வு வழங்கிய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவும், சொத்து குவிப்பு புகார் தொடர்பாக சிபிஐ விசாரிக்கவும் உத்தரவிட வேண்டும். இவ்வாறு கூறப்பட்டிருந்தது.
மனுவை நீதிபதி பி.புகழேந்தி மீண்டும் விசாரித்தார். வெங்கடாச்சலம் விருப்ப ஓய்வு தொடர்பான அசல் ஆவணங்களை தாக்கல் செய்ய அரசு தரப்பில் அவகாசம் வேண்டும் என்றும், அந்த ஆவணங்களை முதல்வரிடம் அனுமதி பெற்ற பிறகே நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய முடியும் என்றும் கூறப்பட்டது.
இதையடுத்து நீதிபதி, ‘ஐஏஎஸ் அதிகாரிக்கு விருப்ப ஓய்வு வழங்கியதில் தேவையான விதிகள் பின்பற்றப்பட்டதா, இல்லையா என்பதை உறுதி செய்வதற்காகவே அந்த ஆவணங்களை தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதனால், அந்த ஆவணங்களை ஒரு வாரத்தில் தாக்கல் செய்ய வேண்டும். இந்த வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் விரிவாக கேட்கப்பட்டுள்ளதால் தீர்ப்பு தள்ளி வைக்கப்படுகிறது என நீதிபதி உத்தரவிட்டார்.
