கோயில் சொத்துகளை பாதுகாக்க வேண்டிய பொறுப்பும், கடமையும் உள்ள அதிகாரிகள் அதில் தவறு இழைக்கக்கூடாது என அறநிலையத்துறைக்கு உயர் நீதிமன்றம் அறிவுரை வழங்கியுள்ளது.
இதுதொடர்பாக திருத்தொண்டர் அறக்கட்டளை தலைவரான சேலம் ஏ.ராதாகிருஷ்ணன், சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில், ‘சென்னை மயிலாப்பூரில் உள்ள கபாலீஸ்வரர் கோயிலில் ஆண்டுதோறும் நடத்தப்படும் அறுபத்து மூவர் உலா மற்றும் பிரம்மோற்சவம் போன்ற திருவிழாக்களின் வரவு – செலவு கணக்கு விவரங்களை இந்து சமய அறநிலையத்துறையின் தணிக்கை பிரிவு அதிகாரிகள் தணிக்கை செய்து அறிக்கை அளித்துள்ளனர்.
அதில் கோயில் நிர்வாகத்தில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளதாக குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளது. இந்த குற்றச்சாட்டுகள் தொடர்பாக பலமுறை புகார் அனுப்பியும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
எனவே, இதுதொடர்பாக உரிய விசாரணை நடத்த அறநிலையத்துறைக்கு உத்தரவிட வேண்டும்’ என கோரியிருந்தார். இந்த வழக்கு நீதிபதி எம்.தண்டபாணி முன்பாக விசாரணைக்கு வந்தது.
அப்போது, மனுதாரரின் புகார் பரிசீலிக்கப்பட்டு சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும், என அறநிலையத்துறை தரப்பில் உறுதியளிக்கப்பட்டது. அதையடுத்து நீதிபதி, ‘‘அறநிலையத்துறையின் தணிக்கை குழு கோயில் நிர்வாகத்தில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளது என குற்றச்சாட்டை சுமத்தியுள்ளது.
அந்த குற்றச்சாட்டுகளின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டியது அறநிலையத்துறை ஆணையரது கடமை. குற்றச்சாட்டுகளின் மீது நடவடிக்கை எடுக்காமல் இருப்பது சட்டப்பூர்வ கடமையை துறப்பதற்கு சமம்.
கோயில் சொத்துகளை பாதுகாக்க வேண்டிய பொறுப்பும், கடமையும் உள்ள அதிகாரிகள் அதில் தவறு இழைக்கக்கூடாது. எனவே, மனுதாரரின் புகாரை 12 வார காலத்துக்குள் பரிசீலித்து சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என அறிவுறுத்தி, வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டுள்ளார்.
