Home உலக செய்திகள் அமெரிக்க ராணுவ தோல்வியை நியாயப்படுத்த ட்ரம்ப் முயற்சி: விமானி மீட்பு விளக்கத்துக்கு ஈரான் பதிலடி

அமெரிக்க ராணுவ தோல்வியை நியாயப்படுத்த ட்ரம்ப் முயற்சி: விமானி மீட்பு விளக்கத்துக்கு ஈரான் பதிலடி

0

அமெரிக்க எஃப்-15 போர் விமானத்தை ஈரான் சுட்டு வீழ்த்திய பிறகு காணாமல் போன விமானியை தாங்கள் மீட்டுவிட்டதாக அதிபர் டொனால்டு ட்ரம்ப் கூறியதைத் தொடர்ந்து, “தெற்கு இஸ்பஹானில் அமெரிக்கா ஒரு கசப்பான தோல்வியை சந்தித்துள்ளது. அதனை நியாயப்படுத்த ட்ரம்ப் முயல்கிறார்” என ஈரான் பதிலளித்துள்ளது.

ஈரானின் பிரஸ் டிவியில், கதம் அல்-அன்பியா மத்திய தலைமையகத்தின் செய்தித் தொடர்பாளர் இப்ராஹிம் ஸோல்ஃபகாரி கூறியதாவது: தெற்கு இஸ்ஃபஹானில் அமெரிக்க ஆக்கிரமிப்பாளர்களுக்கு எதிராக ஈரானியப் படைகள் மேற்கொண்ட வீரமிக்க நடவடிக்கைகள், அமெரிக்க இராணுவத்தின் பலவீனத்தையும், அப்படைகளின் அவமானகரமான தோல்வியையும் வெளிப்படுத்துகின்றன. இந்த சூழலில், ட்ரம்ப் பொதுமக்களின் கருத்தில் குழப்பத்தை ஏற்படுத்தி, தனது பலவீனமான ராணுவத்தின் கசப்பான தோல்வியை நியாயப்படுத்த முயற்சிக்கிறார்.

இறைவனின் உதவியுடன், எங்கள் தேசத்தின் துணிச்சலான போராளிகள் எந்தவொரு ஆக்கிரமிப்பாளரையும் வெட்டி வீழ்த்தி, அவர்களை முற்றிலுமாக நசுக்குவார்கள் என்று நாங்கள் முன்னரே எச்சரித்திருந்தோம். தெற்கு இஸ்ஃபஹானில் ஈரானியப் படைகளின் தீர்க்கமான வெற்றி, இந்தத் துணிச்சலான நடவடிக்கைக்கு ஒரு தெளிவான எடுத்துக்காட்டாகும் என்று அவர் கூறினார்.

இந்த மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த ஒரு சி-130 ரக அமெரிக்க விமானத்தைத் தாங்கள் சுட்டு வீழ்த்தியதாக, ஈரான் ராணுவம் உரிமை கோரியுள்ளது. மேலும், ஈரானின் ‘ஃபார்ஸ்’ செய்தி நிறுவனம், ஒரு வயல்வெளியிலிருந்து புகை எழுவதைக் காட்டும் புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளது.

ஈரான் வான் பரப்​பில் பறந்த அமெரிக்க விமானப் படை​யின் எப் -35 மற்​றும் எப்- 15 இ ரக போர் விமானங்​கள் நேற்று முன் தினம் சுட்டு வீழ்த்​தப்பட்டன. இதில் ஒரு விமானி பத்திரமாக திரும்பிய நிலையில், மற்றொரு விமானி காணாமல் போனார்.

இதனையடுத்து, ஈரானால் சுட்டு வீழ்த்தப்பட்ட போர் விமானத்தின் விமானி மீட்கப்பட்டு, தற்போது பாதுகாப்பாக ஈரானை விட்டு வெளியேறிவிட்டார் என்று அமெரிக்க உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இதுகுறித்து அமெரிக்க அதிபர் ட்ரம்ப் வெளியிட்ட சமூக வலைதளப் பதிவில், “நாங்கள் அவரைக் கண்டுபிடித்துவிட்டோம். என் சக அமெரிக்கர்களே, கடந்த சில மணிநேரங்களில், அமெரிக்க ராணுவம், நமது அமெரிக்க அதிகாரி ஒருவருக்காக, அமெரிக்க வரலாற்றிலேயே மிகவும் துணிச்சலான தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகளில் ஒன்றை வெற்றிகரமாக நிகழ்த்தியுள்ளது. அவர் மிகவும் மதிக்கப்படும் ஒரு கர்னலாகவும் இருக்கிறார்.

பென்டகன் அந்த அதிகாரியை 24 மணி நேரமும் கண்காணித்து வந்தது. அவரை மீட்பதற்காக விடாமுயற்சியுடன் திட்டமிட்டு வந்தது. அவரை மீட்க, உலகின் மிகவும் சக்திவாய்ந்த ஆயுதங்களைக் கொண்ட பல விமானங்களை நம் ராணுவம் அனுப்பியது. அந்த விமானி, ஈரானின் அபாயகரமான மலைப்பகுதிகளில் பதுங்கி இருந்தார். தொடர்ந்து அவர் நமது எதிரிகளால் தேடப்பட்டுக் கொண்டிருந்தார்.

அமெரிக்கப் படைகளின் மீட்பு முயற்சியின்போது கடுமையான துப்பாக்கிச் சண்டைக்குப் பின் அவர் மீட்கப்பட்டார். ஈரானிய வான்வெளியில் நாம் மிகப்பெரிய வான் ஆதிக்கத்தை அடைந்துவிட்டோம் என்பதை இந்த நடவடிக்கை காட்டுகிறது. இந்த மீட்புப் பணியில் எந்த அமெரிக்கரும் கொல்லப்படவோ அல்லது காயமடையவோ இல்லை” என்று அவர் குறிப்பிட்டார்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version