ஈரான் -அமெரிக்கா இடையே கடந்த 6 மாதங்களாக மோதல் தொடர்ந்து நீடிக்கிறது. இந்தப் போர் வான்வழித் தாக்குதல்களால் மட்டுமின்றி சமூக வலைத்தள பதிவுகளாலும் தீவிர மடைந்து வருகிறது.
ஈரான், அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் இருப்பது போல ஏஐ மூலம் உருவாக்கப்பட்ட புகைப்படங்கள், வீடியோக்களை அவ்வப்போது அமெரிக்க அதிபர் ட்ரம்ப் வெளியிட்டு வருகிறார். அதற்கு ஈரான் பதிலடி கொடுத்து வருகிறது.
அதன் ஒரு பகுதியாக ஈரான் அண்மைக் காலமாக இந்திய திரைப்படங்களின் காட்சிகளைப் பயன்படுத்தி ட்ரம்பை கிண்டல் செய்து வருகிறது. சமீபத்தில் பாலிவுட் நடிகர் அக் ஷய் குமாரின் வைரல் மீம் ஒன்றை பயன்படுத்தி ட்ரம்ப்பை கேலி செய்தது.
இந்நிலையில் ஜிம்பாப்வேவில் உள்ள ஈரான் தூதரகம், தெலுங்கு நடிகர் நந்தமுரி பாலகிருஷ்ணாவின் (பாலய்யா) சண்டைக் காட்சியை எக்ஸ் தளத்தில் பகிர்ந்து ட்ரம்ப்பை கிண்டல் செய்துள்ளது.
2023-ம் ஆண்டு வெளியான `பகவந்த் கேசரி’ திரைப்படத்தின் 58 வினாடி அதிரடி காட்சியை எக்ஸ் தளத்தில் பகிர்ந்தது. அதில், நடிகர் பாலகிருஷ்ணா ஒரே சமயத்தில் தன்னை நோக்கி வரும் ஏராளமான துப்பாக்கி குண்டுகளை பாதாள சாக்கடையின் மூடியை வைத்தே தடுக்கும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.
அந்த வீடியோவுடன், “ட்ரம்ப் ஈரானை அழித்துவிடுவதாக பேசுகிறார். ஆனால் ஈரான் தன்னைத் தற்காத்துக் கொள்ள முடியாத நாடு அல்ல என்பதை அவர் அறிவார்” என குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், “ட்ரம்ப் மற்றும் அவரது நிர்வாகம் சமீபத்தில் ஹாலிவுட் படங்களை விட பாலிவுட் படங்களையே பார்த்து வருகிறார்கள்” என்றும் பதிவில் நகைச்சுவையாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
