அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வியடைய அமெரிக்காவே காரணம்: ஈரான் குற்றச்சாட்டு

0
10

பாகிஸ்தானில் சனிக்கிழமை அன்று தொடங்கிய அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வியடைய அமெரிக்காதான் காரணம் என ஈரான் வெளியுறவு அமைச்சர் சையது அப்பாஸ் அராக்சி தெரிவித்துள்ளார்.

கடந்த பிப்.28-ம் தேதி அன்று ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் படைகள் கூட்டாக இணைந்து தாக்குதல் நடத்தின. அதையடுத்து இஸ்ரேல் மற்றும் வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்கள், அமெரிக்க நட்பு நாடுகள் மீது ஈரான் பதில் தாக்குதல் நடத்தியது. இதனால் மேற்காசியாவில் போர் மூண்டது. இந்நிலையில், கடந்த வாரம் இடைக்கால போர் நிறுத்தத்துக்கு அமெரிக்காவும், ஈரானும் சம்மதம் தெரிவித்தன.

இதைத் தொடர்ந்து பாகிஸ்தானின் இஸ்லாமாபாத் நகரில் கடந்த சனிக்கிழமை அன்று அமெரிக்கா, ஈரான் இடையிலான அமைதிப் பேச்சுவார்த்தை தொடங்கியது. இதன் மூலம் இருதரப்புக்கும் இடையிலான பிரச்சினைகளை சுமுகமாக பேசி தீர்ப்பதற்கான முயற்சி தொடங்கியது. இதில் அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ், ஈரான் நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் காலிபாப் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த அமைதிப் பேச்சுவார்த்தை சுமார் 21 மணி நேரம் நடந்த நிலையில் தோல்வி அடைந்ததாக அறிவிக்கப்பட்டது.

“கடந்த 47 ஆண்டுகளில் இல்லாத வகையில் போரை முடிவுக்கு கொண்டு வரும் முனைப்போடு உயர்மட்ட அளவில் தீவிரப் பேச்சுவார்த்தையில் அமெரிக்காவுடன் ஈரான் ஈடுபட்டது. இது நல்லெண்ண அடிப்படையிலானது. பாகிஸ்தானில் இருதரப்புக்கும் இடையில் ஒப்பந்தம் எட்ட இருந்த நிலையில் சில புதிய நிபந்தனைகள் வைக்கப்பட்டன. நல்லெண்ணம் நல்லெண்ணத்தையே உருவாக்கும். பகைமை பகைமையையே உருவாக்கும்” என எக்ஸ் தள பதிவில் அப்பாஸ் அராக்சி தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா – ஈரான் இடையிலான பேச்சுவார்த்தை தோல்வியடைந்த நிலையில் மேற்காசியாவில் போர் பதற்றம் மீண்டும் அதிகரித்துள்ளது. ஹார்முஸ் ஜலசந்தி மூடப்படும் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். ‘ஹார்முஸ் ஜலசந்தி பகுதியில் போர்க் கப்பல்கள் நுழைய முயற்சித்தால் மிகப்பெரிய தாக்குதல் நடத்துவோம்’ என்று ஈரான் இஸ்லாமிய புரட்சிப் படை தெரிவித்துள்ளது. இதனால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்துள்ளது. அதோடு எரிபொருள், எரிவாயு தட்டுப்பாடு சார்ந்த அபாயமும் நிலவுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here