ஐபிஎல் 2026-ம் ஆண்டுக்கான வீரர்கள் ஏலம் வரும் டிசம்பர் 13 முதல் 15-ம் தேதிக்குள் நடைபெறக்கூடும் என தகவல்கள் வெளியாகி உள்ளன. வீரர்கள் ஏலம் தொடர்பாக அணிகளின் உரிமையாளர்கள் பிசிசிஐ நிர்வாகிகளிடம் பேசி உள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் ஐபிஎல் ஆட்சிமன்றக்குழு இதுதொடர்பாக இதுவரை எந்தவித அறிவிப்பையும் வெளியிடவில்லை.
மேலும் இம்முறை ஏலம் வெளிநாட்டில் நடைபெறுமா? என்பதும் தெரியவில்லை. கடந்த இரு ஆண்டுகளாக ஐபிஎல் வீரர்கள் ஏலம் வெளிநாடுகளில்தான் நடத்தப்பட்டு வருகிறது. எனினும் இம்முறை மினி வீரர்கள் ஏலத்தை இந்தியாவில் நடத்த பிசிசிஐ முடிவு செய்தாலும் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றும் இல்லை எனவும் கூறப்படுகிறது.
இருப்பினும் வீரர்களை தக்கவைத்துக் கொள்ளவும், விடுவிப்பதற்கான கடைசி தேதி நவம்பர் 15 ஆக இருக்கக்கூடும். அதற்குள் விடுவிக்க முடிவு செய்துள்ள வீரர்களின் பட்டியலை அணிகளின் உரிமையாளர்கள் சமர்ப்பிக்க வேண்டும். கடந்த சீசனில் கடைசி இரு இடங்களை இடத்தைப் பிடித்த சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளைத் தவிர மற்ற அணிகள் பெரிய அளவிலான மாற்றங்களை மேற்கொள்ள வாய்ப்பில்லை என்றே கூறப்படுகிறது. சிஎஸ்கேவில் இருந்து தீபக் ஹூடா, விஜய் சங்கர், ராகுல் திரிபாதி, சேம் கரண், டேவன் கான்வே உள்ளிட்டோர் விடுவிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. 5 முறை சாம்பியனான அந்த அணியின் கைவசம் ரூ.9.75 கோடி உள்ளது. ஏனெனில் அஸ்வின் ஐபிஎல் தொடரில் ஓய்வு பெற்றுவிட்டார்.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் சஞ்சு சாம்சன், வனிந்து ஹசரங்கா, தீக்ஷனா ஆகியோர் வேறு அணிக்கு தாவக்கூடும். இதேபோன்று டி.நடராஜன், மிட்செல் ஸ்டார்க், ஆகாஷ் தீப், மயங்க் யாதவ், டேவிட் மில்லர் உள்ளிடோரும் வேறு அணிக்கு மாற வாய்ப்பு உள்ளது.