நடப்பு மகளிர் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் சாம்பியன் பட்டம் வென்றுள்ளது ஹர்மன்பிரீத் தலைமையிலான இந்திய அணி. இந்நிலையில், அவர்களுக்கு இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் ஜாம்பவான்கள் சச்சின் டெண்டுல்கர் மற்றும் மிதாலி ராஜ் ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
சச்சின் டெண்டுல்கர்: 1983 உலகக் கோப்பை ஒரு முழு தலைமுறையை பெரிய கனவுகளை காணவும், அந்த கனவுகளைத் துரத்தவும் தூண்டியது. தற்போது, நமது மகளிர் கிரிக்கெட் அணி உண்மையிலேயே சிறப்பான ஒன்றைச் செய்துள்ளது. அவர்கள் நாடு முழுவதும் உள்ள எண்ணற்ற இளம் பெண் குழந்தைகள் பேட்டையும், பந்தையும் கையில் எடுக்கவும், களத்தில் இறங்கவும், அவர்களும் ஒரு நாள் அந்த கோப்பையை வெல்ல முடியும் என்ற நம்பிக்கையை கொடுத்துள்ளனர். இந்திய மகளிர் கிரிக்கெட்டின் பயணத்தில் இது ஒரு தீர்க்கமான தருணம். சபாஷ், இந்திய அணி. நீங்கள் முழு நாட்டையும் பெருமைப்படுத்தியுள்ளீர்கள்.
மிதாலி ராஜ்: இந்திய பெண்கள் உலகக் கோப்பையை கைகளில் உயர்த்திப் பிடிப்பதை பார்க்க வேண்டும் என்ற கனவை நான் இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாகக் கண்டு வருகிறேன். அந்தக் கனவு இறுதியாக நனவாகி உள்ளது. 2005-ம் ஆண்டு மனவேதனையிலிருந்து 2017-ம் ஆண்டு போராட்டம் வரை, ஒவ்வொரு துளி கண்ணீர், தியாகத்தை பார்த்து நாங்கள் இருக்கிறோம் என நம்பிக்கையுடன் மட்டையை எடுத்த அனைத்து இளம் வீராங்கனையானலும் இது சாத்தியமாகி உள்ளது.
உலக கிரிக்கெட்டின் புதிய சாம்பியன்களான நீங்கள் கோப்பையை மட்டும் வெல்லவில்லை, இந்திய மகளிர் கிரிக்கெட்டுக்காக துடிக்கும் ஒவ்வொரு இதயத்தையும் வென்றுள்ளீர்கள்.
            













