அமெரிக்காவின் நியூயார்க் நகர மேயர் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளரும், இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவருமான ஜோரான் மம்தானி வெற்றி பெற்றார். அமெரிக்காவின் மிக முக்கியமான நகரங்களில் நியூயார்க் நகரமும் ஒன்று. இங்கு நடைபெற்ற மேயர் தேர்தலில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஜோரான் மம்தானி போட்டியிட்டார்.
இவரது தாய் மீரா நாயர் இந்தியாவைச் சேர்ந்த சினிமா தயாரிப்பாளர். தந்தை மகமூத் மம்தானி உகாண்டாவைச் சேர்ந்தவர். ஜோரான் மம்தானிக்கு 7 வயது இருக்கும்போதே அமெரிக்காவின் நியூயார்க் நகரில் குடியேறிவிட்டார். படிப்பை முடித்ததும் அரசியலில் இறங்கினார். கடந்த 2020-ம் ஆண்டு இவர் முதல் முறையாக நியூயார்க் சட்டப்பேரவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.
தற்போது நடைபெற்ற நியூயார்க் நகர மேயர் தேர்தலில் அவர் ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட்டார். இவரை எதிர்த்து அதிபர் டொனால்டு ட்ரம்பின் குடியரசு கட்சி சார்பில் கர்டிஸ் ஸ்லிவா, சுயேட்சையாக முன்னாள் நியூயார்க் ஆளுநர் ஆண்ட்ரூ கூமோ ஆகியோர் போட்டியிட்டனர். மம்தானி தனது பிரச்சாரத்தின் போது இலவச பஸ் சேவை, குழந்தைகள் பராமரிப்பு மையம், நியூயார்க் நகருக்கு சொந்தமான பலசரக்கு கடைகள், குறைந்த விலை மற்றும் வாடகை வீடுகள் உட்பட பல வாக்குறுதிகளை அளித்தார்.
ஜோரான் மம்தானி 50.4 சதவீத வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். நியூயார்க்கில் மேயராக தேர்வு செய்யப்பட்டுள்ள முதல் இந்திய அமெரிக்க முஸ்லிம் மம்தானி என்பது குறிப்பிடத்தக்கது. இவருக்கு இந்திய அமெரிக்கர்கள் அனைவரும் தங்கள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.
ஊழலுக்கு முடிவு கட்டுவேன்: நியூயார்க் மேயர் தேர்தலில் வெற்றி பெற்ற ஜோரான் மம்தானி நேற்று முன்தினம் இரவு உரையாற்றினார். இதில் அவர் இந்தியா சுதந்திரம் பெற்றபோது, இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு ஆற்றிய ‘விதியுடன் ஒரு சந்திப்பு’ என்ற சுதந்திர தின உரையை நினைவு கூர்ந்தார். அப்போது மம்தானி பேசும்போது, “நியூயார்க்கின் புதிய தலைமுறையினருக்கு நன்றி.
நாங்கள் உங்களுக்காக இருக்கிறோம். உங்களுக்காக போராடுவோம். எதிர்காலம் நமது கையில் உள்ளது. ஒரு அரசியல் சாம்ராஜ்ஜியத்தையை நாம் தோற்கடித்துள்ளோம். டொனால்டு ட்ரம்ப் அவர்களே, உங்களை வளர்த்த நகரமே உங்களை தோற்கடித்துவிட்டது. ஊழல் கலாச்சாரத்துக்கு முடிவு கட்டுவேன். இதுதான் உங்களைப்போன்ற கோடீஸ்வரர்கள் வரிஏய்ப்பு செய்ய அனுமதித்தது. மலிவான நகரம், புதுவித அரசியல், மாற்றம் ஆகியவற்றுக்கு வாக்களித்த நியூயார்க் மக்களுக்கு நன்றி” என்றார்.














