Home உலக செய்திகள் ஐ.நா உறுப்பு நாடு உரிமைக்கான பாலஸ்தீன முயற்சிக்கு இந்தியா ஆதரவு

ஐ.நா உறுப்பு நாடு உரிமைக்கான பாலஸ்தீன முயற்சிக்கு இந்தியா ஆதரவு

0

ஐக்கிய நாடுகள் சபையின் உறுப்பு நாடாக அங்கீகரிக்க வேண்டும் என்பதற்கான பாலஸ்தீனத்தின் முயற்சிக்கு தொடர்ச்சியான ஆதரவை அளித்து வருவதாக இந்தியா தெரிவித்துள்ளது.

பாலஸ்தீன நன்கொடையாளர் குழுவின் அமைச்சர்கள் அளவிலான கூட்டம் பெல்ஜியம் தலைநகர் பிரஸ்ஸல்ஸில் நேற்று (ஜூலை 13) நடைபெற்றது. ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகள், பாலஸ்தீனம் மற்றும் பிற முக்கிய சர்வதேச நட்பு நாடுகள், நிதி நிறுவனங்கள் இதில் கலந்து கொண்டன.

ஐரோப்பிய ஆணையம் மற்றும் பாலஸ்தீன ஆணையம் ஆகிய இரண்டும் இணைந்து கூட்டாக நடத்திய இந்த கூட்டத்தில் இந்தியா சார்பில் வெளியுறவுத் துறை செயலாளர் ஸ்ரீபிரியா ரங்கநாதன் கலந்து கொண்டார்.

கூட்டத்தில் உரையாற்றிய ஸ்ரீபிரியா ரங்கநாதன், “பாலஸ்தீன மக்களுடன் இந்தியா நீண்டகாலமாக தொடர்ந்து நல்லுறவு கொண்ட கூட்டாளியாகத் திகழ்கிறது. இரு நாடுகள் தீர்வு மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் உறுப்பு நாடாக அங்கீகரிக்க வேண்டும் என்பதற்கான பாலஸ்தீனத்தின் முயற்சி ஆகியவற்றுக்கு இந்தியாவின் தொடர்ச்சியான ஆதரவு உண்டு.

திறன் மேம்பாட்டுத் திட்டங்கள், மனிதாபிமான உதவிகள் ஆகியவற்றை பாலஸ்தீன மக்களுக்கு இந்தியா தொடர்ச்சியாக வழங்கி வருகிறது. இந்தியாவின் திட்டங்கள் மக்களின் தேவையை அடிப்படையாகக் கொண்டவை. சுகாதாரம், கல்வி, திறன் மேம்பாடு, தொழிற்பயிற்சி ஆகியவற்றில் இந்தியா முக்கிய கவனம் செலுத்தி வருகிறது.

மேலும், பாலஸ்தீனத்தில் சுகாதாரம், பெண்கள் மேம்பாடு, நிறுவன கட்டமைப்பு ஆகிய துறைகளிலும் இந்தியா தற்போது முக்கிய திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது.

பாலஸ்தீன மக்களுக்கான மனிதாபிமானத் தேவைகளைப் பூர்த்தி செய்வதில் உறுதியான பங்களிப்பை வழங்கும் ஓர் அர்ப்பணிப்புள்ள கூட்டாளியாக இந்தியா தொடர்ந்து திகழ்கிறது” என தெரிவித்தார்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version