இந்தியா வேகமாக தன்னிறைவு பெற்று வருகிறது என மத்திய கனரக தொழில் துறை இணை அமைச்சர் பூபதி ராஜு சீனிவாச வர்மா தெரிவித்தார்.
சிவகங்கை அருகே இலுப்பைக்குடி இந்தோ-திபெத் எல்லை பாதுகாப்புப் படை பயிற்சி மையத்தில், மத்திய அரசு துறைகளில் தேர்வான 455 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்வுக்கு மத்திய கனரக தொழில்துறை இணை அமைச்சர் பூபதி ராஜு சீனிவாச வர்மா தலைமை வகித்தார். இந்தோ-திபெத் எல்லை பாதுகாப்புப் படை டிஐஜி அக்சல் சர்மா வரவேற்றார்.
பணி நியமன ஆணைகளை வழங்கி மத்திய இணை அமைச்சர் பேசியதாவது: இந்தியா வேகமாக தன்னிறைவு பெற்று வருகிறது. கடந்த 10 ஆண்டுகளில் வளர்ச்சியின் வேகம் அதிகரித்துள்ளது. மத்திய அரசின் 30-க்கும் மேற்பட்ட துறைகளில் வேலைக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர். ‘மேக் இன் இந்தியா’ திட்டம் மூலம் பல துறைகளில் உலகளாவிய மையமாக மாறிவிட்டோம். முன்பு இறக்குமதியை நம்பி இருந்த துறைகள், தற்போது ஏற்றுமதியில் சாதனை படைத்து வருகின்றன.
சிறிய பொருட்கள் முதல் ரயில் பெட்டிகள் வரை நாட்டிலேயே உற்பத்தி செய்யப்பட்டு புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டு வருகின்றன. பாரதம் ஓர் உலகளாவிய உற்பத்தி மையமாகவும், தகவல் தொழில்நுட்பத் துறையில் மிகப்பெரிய சேவை வழங்கும் இடமாகவும் தன்னை நிலைநிறுத்திக் கொண்டுள்ளது.
நவீன உள்கட்டமைப்புக்காக அரசு மேற்கொண்டு வரும் முயற்சிகள் அனைத்தும் சுற்றுலாத் துறையையும் மேம்படுத்துகின்றன. ‘ஸ்டார்ட் அப் இந்தியா’ பிரச்சாரம் நாட்டின் இளைஞர்களின் வாழ்க்கையை மாற்றியுள்ளது. 2014-ம் ஆண்டில் 350 ஆக இருந்த ‘ஸ்டார்ட் அப்’ நிறுவனங்கள் தற்போது 1.27 லட்சமாக அதிகரித்துள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.
மதுரை தபால் துறை உதவி இயக்குநர் பொன்னையா, தேனி கனரா வங்கி மண்டல மேலாளர் ஜெயலட்சுமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கமாண்டிங் அதிகாரி சுனில்குமார் நன்றி கூறினார்.














