ரஷ்யாவுடனான போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா ஆதரவளித்து வருகிறது. இதனால் ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் கொள்முதல் செய்யும் நாடுகளின் பொருட்களுக்கு கூடுதல் வரி விதிக்கப்படும் என அதிபர் டொனால்டு ட்ரம்ப் கூறி வருகிறார்.
இதனிடையே, தனது கச்சா எண்ணெய் தேவையில் 80% க்கும் அதிகமாக இறக்குமதி செய்யும் இந்தியா, தனது விநியோக வலையமைப்பை 27 நாடுகளில் இருந்து 41 நாடுகளாக விரிவுபடுத்தியுள்ளது என்று கடந்த வாரம் மத்திய அமைச்சர் ஹர்தீப் பூரி உறுதிப்படுத்தினார். இந்நிலையில், 3 நாள் பயணமாக இந்தியா வந்துள்ள அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ, பிரபல தனியார் சேனலுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: கச்சா எண்ணெய் இறக்குமதியை விரிவுபடுத்தும் இந்தியாவின் நடவடிக்கை, அமெரிக்காவின் அழுத்தத்தால் அல்ல, மாறாக அதன் சொந்த நலன்களுக்காகவே எடுக்கப்பட்டது.
இந்தியா தனது எரிசக்தித் தொகுப்பை விரிவுபடுத்துவதில் உண்மையான முன்னேற்றம் கண்டுள்ளது. அச்சுறுத்தல்கள் அல்லது அதுபோன்ற காரணங்களால் இந்தியா அவ்வாறு செய்யவில்லை. ஒரே ஒரு நாட்டை மட்டும் நம்பியிருப்பது, பெரும் பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும். இது ரஷ்ய எண்ணெயைக் குறைவாக வாங்குவதைப் பற்றியது அல்ல, மாறாக அமெரிக்கக் கச்சா எண்ணெய், வெனிசுலா அல்லது பிற மேற்கத்திய நாடுகளின் எண்ணெயை அதிகமாக வாங்குவதைப் பற்றியது. அது இந்தியாவின் நலன்களுக்கு உகந்தது. இவ்வாறு அவர் கூறினார்.














