போலீஸ் கதாபாத்திரத்தில், நடிகர் நகுல் நடித்துள்ள படம் ‘தி டார்க் ஹெவன்’. இதை ‘டி3’ படத்தை இயக்கிய பாலாஜி இயக்கியுள்ளார்.
மணிகண்டன் பி.கே.ஒளிப்பதிவு செய்துள்ளார். சக்தி பாலாஜி இசையமைத்துள்ளார். ரேணு சவுந்தர், சரண், கேசவன், ஜான் அலெக்ஸ், மனோஜ் உட்பட பலர் நடித்துள்ளனர். கோதை என்டர்டெயின்மென்ட் மற்றும் எம்.எஸ்.மீடியா ஃபேக்டரி தயாரித்துள்ளன. இந்தப் படத்தின் அறிமுக நிகழ்ச்சி சென்னையில் நடந்தது.
படத்தின் ஹீரோ நகுல் பேசும்போது, “இதில் போலீஸாக நடித்திருக்கிறேன். சின்ன வயதில் இருந்தே காக்கி யூனிபார்ம் மீது எனக்கு காதல் உண்டு. நான் நடிக்க வந்து 20 ஆண்டு ஆகிவிட்டது. ஆனால் இப்போது தான் ஆரம்பித்தது போல் இருக்கிறது. நான் எந்த யோசனையும் இல்லாமல் தான் நடிக்க வந்தேன். சினிமா எனது வாழ்க்கை. கடந்த காலத்தைப் பற்றிக் கவலைப்படுவதில்லை. இந்தத் தருணத்தை இனிமையாக்க வேண்டும் என்று நினைப்பேன்.
போலீஸ் பாத்திரத்தில் நடிக்க, யூனிஃபார்ம் போட்டால் மட்டும் போதாது. அதை அணிந்த பிறகு வேறு மாதிரியான கம்பீர உணர்வு நமக்கு வரும். நம்மைப் பார்த்து ஒருவர் சல்யூட் அடிக்கும் போது நாம் உணர்வது வேறு வகையிலானது. இந்தப் படத்தின் இளம்பாரி கேரக்டர் பேசப்படுவதாக இருக்கும்” என்றார். படக்குழுவினர் கலந்து கொண்டனர்.