நாகர்கோவில்: ஆயுத பூஜை தினத்தை முன்னிட்டு, நாகர்கோவில் கிருஷ்ணன் கோவில் பகுதியில் அமைந்துள்ள மாநகராட்சி குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் வண்ண மின்விளக்குகளால் அழகாக அலங்கரிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தின் செயல்பாடுகள் மற்றும் அதன் கட்டமைப்புகளைப் பொதுமக்கள் நேரில் பார்வையிடும் வகையில் அனுமதி வழங்கப்பட்டது.
இதையடுத்து, கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் திரு. பிரதாப், IAS, அவர்கள் தனது குடும்பத்தினருடன் குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு வருகை தந்தார். வண்ண மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட நிலையத்தைப் பொதுமக்களுடன் இணைந்து பார்வையிட்டார்.
குடும்பத்தினருடன் வருகை தந்த மாவட்ட ஆட்சியரை, நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மேரி பிரின்சி லதா மற்றும் மாநகராட்சி செயற்பொறியாளர் ஜெகஜீவன் ராம் ஆகியோர் வரவேற்றனர்.
ஆயுத பூஜையை முன்னிட்டு குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அலங்கரிக்கப்பட்டு, அதன் செயல்பாடுகளைப் பொதுமக்கள் நேரில் பார்வையிட வாய்ப்பு வழங்கப்பட்டது அப்பகுதி மக்களிடையே கவனத்தை ஈர்த்தது.