‘இசை மேதை இளையராஜா, அனைத்து வகையிலும் ஒரு முன்னோடி’ என பிரதமர் மோடி பாராட்டியுள்ளார்.
இசையமைப்பாளர் இளையராஜா தனது முதல் மேற்கத்திய பாரம்பரிய சிம்பொனி இசையை லண்டனில் கடந்த 9-ம் தேதி அரங்கேற்றினார். ஆசியாவிலிருந்து சிம்பொனியை எழுதி அரங்கேற்றிய முதல் இசையமைப்பாளர் என்ற சாதனையை அவர் படைத்தார். இந்நிலையில் பிரதமர் மோடியை, இளையராஜா நேற்று சந்தித்தார்.
இதுகுறித்து மோடி எக்ஸ் தளத்தில் கூறியிருப்பது: “நமது இசை மற்றும் கலாச்சாரத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய இசை மேதையும், மாநிலங்களவை உறுப்பினருமான இளையராஜாவை சந்தித்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். அவர் அனைத்து வகையிலும் ஒரு முன்னோடியாகத் திகழ்கிறார். லண்டனில் தமது முதலாவது மேற்கத்திய கிளாசிக்கல் சிம்பொனியான ‘வேலியன்ட்டை’ அரங்கேற்றியதன் மூலம் மீண்டும் வரலாறு படைத்தார். இந்நிகழ்ச்சி உலகப் புகழ்பெற்ற ராயல் பில்ஹார்மோனிக் இசைக்குழுவுடன் நடத்தப்பட்டது. இந்த சாதனை அவரது இணையற்ற இசை பயணத்தில் மற்றுமொரு அத்தியாயத்தை குறிக்கிறது – இது உலக அளவில் தொடர்ந்து மேன்மையுடன் விளங்குவதை எடுத்துக்காட்டுகிறது”. இவ்வாறு அதில் பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.








